அமெரிக்காவின் முற்றுகையை மீறி பயணிக்க முயன்ற ஈரானிய சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றிய நிலையில் இரு தரப்புக்கும் இடையிலான இரண்டு வார போர் நிறுத்தத்தை நீடிப்பதில் சந்தேகம் வலுத்திருப்பதோடு பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பிரதிநிதிகளை அனுப்பவும் ஈரான் மறுத்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் நாளை (22) காலாவதியாகவுள்ள நிலையிலேயே பதற்றம் அதிகரித்துள்ளது. போர் நிறுத்தம் காலாவதியாவதற்கு முன்னதாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் முயற்சியாக அமெரிக்கா தனது தூதுக் குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது. எனினும் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்திருக்கும் ஈரான், அமெரிக்காவின் செயலுக்கு பதிலடி கொடுப்பதாக எச்சரித்துள்ளது.
ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா முற்றுகையை முன்னெடுத்து வருவதோடு ஈரான் ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் முடக்கியுள்ளது. இந்த நீரிணை உலக எரிசக்தி விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வகிக்கும் நிலையில் எண்ணெய் விலை நேற்று மீண்டும் அதிகரிப்பை காட்டியது.
ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை நோக்கிச் செல்லும் ஈரான் கொடியுடனான சரக்குக் கப்பல் மீது அமெரிக்க இராணுவம் கடந்த ஞாயிறன்று சூடு நடத்தியது. ஆறு மணி நேரம் நீடித்த இழுபறிக்குப் பின்னரே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்த அமெரிக்க கடற்படையினர் கயிறுகள் மூலம் ஹொலிகொப்டர்களில் இருந்து கப்பலுக்குள் இறங்கியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்தது. ‘நாம் கப்பலை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு, கப்பலில் என்ன உள்ளது என்பதைப் பார்த்தோம்’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கப்பல் சீனாவில் இருந்து வந்ததாக ஈரான் இராணுவம் தெரிவித்தது. ‘இஸ்லாமிய குடியரசு ஆயுதப் படைகள் அமெரிக்க இரணுவத்தின் கடற்கொள்ளைக்கு எதிராக விரைவில் பதிலடி கொடுப்போம் என்று எச்சரிக்கிறோம்’ என ஈரானிய இராணுவ பேச்சாளர் ஒருவர் அந்நாட்டு அரச ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த பதற்றத்திற்கு மத்தியில் மீண்டும் போர் மூளும் அச்சம் அதிகரித்திருக்கும் சூழலில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. பிரெண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 6.5 வீதத்தால் அதிகரித்துள்ளது. இதன்படி, அதன் புதிய விலை 96.25 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. டபிள்யூ.டீ.ஐ. வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் புதிய விலை 90.15 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
ஈரான் புதிய அமைதி பேச்சுவார்த்தைகளை நிராகரிப்பதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது முன்னெடுத்துவரும் முற்றுகை, அச்சுறுத்தும் சொல்லாடல்கள் மற்றும் அமெரிக்காவின் மாறிவரும் நிலைப்பாடுகள், அதிகபட்சமான கோரிக்கைகள் இதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் அதேநேரம் மற்றவர்களுக்கு இலவச பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது’ என்று ஈரானின் முதல் துணை ஜனாதிபதி முஹமது ரெசா அரப், சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். ‘தேர்வு தெளிவாக உள்ளது, ஒன்று அனைவருக்கும் சுதந்திரமான எண்ணெய் சந்தையை ஏற்படுத்துவது அல்லது அனைவருக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை உருவாக்குவது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் ஈரான் மீதான தனது அச்சுறுத்தலின் தொடர்ச்சியாக தனது நிபந்தனைகைளை ஈரான் நிராகரித்தால் ஈரானின் அனைத்து பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களையும் அழிப்பதாக முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அமெரிக்கா தனது சிவில் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தினால் வளைகுடா அண்டை நாடுகளின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் உப்புநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தாக்குவதாக ஈரான் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான பிரதிநிதிகள் நேற்று பாகிஸ்தானை சென்றடைந்துள்ளனர். இதில் முடிவு ஒன்று எட்டப்படாத முதல் சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்ற டிரம்பின் விசேட தூதுவரான ஸ்டீவ் விட்கொப் மற்றும் அவரின் மருமகனான ஜெராட் குஷ்னர் ஆகியோரும் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த அமைதி முயற்சியில் பிரதான மத்தியஸ்தராக செயற்படும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்துள்ளது. அமெரிக்க பிரதிநிதிகளின் வருகைக்கான ஏற்பாடுகளைச் செய்யும் வகையில் அமெரிக்காவின் இரு சி-17 பிரமாண்ட சரக்கு விமானங்கள் கடந்த ஞாயிறன்றே பாகிஸ்தான் விமானத் தளம் ஒன்றில் தரையிறங்கியுள்ளன. அவை பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களை எடுத்து வந்திருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் மாநகர சபை இந்தப் பேச்சுவார்த்தையை ஒட்டி பொதுப் போக்குவரத்துகள் மற்றும் கனரக பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை இடைநிறுத்தியுள்ளது. கடந்த வார பேச்சுவார்த்தை இடம்பெற்ற செரேனா ஹோட்டலை சுற்றி முட்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து விருந்தினர்களையும் வெளியேறும்படி அந்த ஹோட்டல் அறிவித்துள்ளது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈரான் தரப்புக்கு அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் முஹமது பக்கர் கலிபஃப் தலைமை வகிக்கிறார். அவர் முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில், இரு தரப்புக்கும் இடையே முன்னேற்றம் எட்டப்பட்டபோதும் அணு விவகாரம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் தொடர்ந்து பெரும் பிளவு இருப்பதாக குறிப்பிட்டார்.



