ஒர்னாப் ஆந்திராவிற்குள் நுழைந்தது; இலங்கைக்கான தாக்கம் படிப்படியாக குறைகிறது

Admin
By
Admin
3 Min Read

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேல் காணப்படும் மிக வலுவான ‘ஒர்னாப்’ (Arnab) புயலானது, ஆந்திரப் பிரதேச கரை ஊடாக  இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 

இதன் காரணமாக இலங்கைக்கான தாக்கம் படிப்படியாக குறைந்துள்ள போதிலும், நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடல் பகுதிகளில்
‘ஒர்னாப்’ (Arnab) புயலானது, ஆந்திரப் பிரதேச கரை ஊடாக  இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது.

வட அகலாங்குகள் 10N – 20N இற்கும் கிழக்கு நெட்டாங்குகள் 80E – 90E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-100 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், இடியுடன் கூடிய பலத்த மழையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இக்கடற்பரப்புகளில் கடல் அலைகள் 3.0 – 4.0 மீற்றர் உயரம் வரை மேலெழக் கூடிய சாத்தியம் காணப்படுவதோடு, இக்கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம்.

எனவே, மறு அறிவித்தல் வரை குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதோடு, இக்கடல் பிரதேசங்களில் இருப்போர் உடனடியாக பாதுகாப்பான பிரதேசத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசக் கூடும் என்பதோடு, அது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படலாம்.

புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலும் மற்றும் காலியிலிருந்து அம்பாந்தோட்டை வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கக் கூடும்.

கடல் நிலை:
புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலும் மற்றும் காலியிலிருந்து அம்பாந்தோட்டை வரையிலுமான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம்.

மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர்) வீசுவதால் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *