அதிகரிக்கும் மழைவீழ்ச்சியால் வெள்ள அபாயத்தைத் தடுக்க நடவடிக்கை

Admin
By
Admin
3 Min Read

இரண்டு வாரங்களுக்குள் கால்வாய்கள் மற்றும் வடிகால்களைச் சுத்தப்படுத்த பிரதமர் ஹரிணி உத்தரவு!

காலநிலை மாற்றத்தை தொடர்ந்து மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மழைநீர் விரைவாக வடிந்து செல்வதை முறைப்படுத்துவதற்காகக் கால்வாய்கள் மற்றும் வடிகால் அமைப்புகளை உடனடியாகச் சுத்தப்படுத்த அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அந்த பணிகளை நிறைவு செய்து தொடர்ந்து பராமரிக்குமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நாரஹேன்பிட்டிய மாவட்ட செயலகத்தில் இன்று (13) நடைபெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, பிரதேச செயலகங்கள், விவசாய மேம்பாட்டுத் திணைக்களம் மற்றும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவற்றினால் வடிகால் அமைப்புகள் மற்றும் கால்வாய்களைச் சுத்தப்படுத்தும் போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாகத் தொழில்நுட்ப அதிகாரிகளின் பற்றாக்குறை மற்றும் திட்டமிடல், மதிப்பீடுகளைத் தயாரிப்பதில் உள்ள சவால்கள் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

கொழும்பு மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டிற்காகச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. கிராமிய வீதி அபிவிருத்தி, சமூக வலுவூட்டல், பேரிடர் முகாமைத்துவ மற்றும் விளையாட்டுப் பண்பாட்டை உருவாக்குதல் ஆகிய முக்கிய துறைகளின் கீழ் உள்ள திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

இதன்படி, 2026 கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம் மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதலாவது கட்டத்தின் கீழ் கொழும்பு,திம்பிரிகஸ்யாய, கோட்டே, ஹோமாகம,பாதுக்க மற்றும் கெஸ்பேவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், இரண்டாவது கட்டத்தின் கீழ் கெஸ்பேவ, மஹரகம, தெஹிவளை,இரத்மலானை, மொறட்டுவை மற்றும் கொலன்னாவ ஆகிய பகுதிகளிலும் வீதி அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

2025 ஆம் ஆண்டின் திட்டத்தின் கீழ் திம்பிரிகஸ்யாய,கொலன்னாவ மற்றும் சீதாவக்க ஆகிய பகுதிகளில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் ஏற்கனவே முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

வறுமையை ஒழிக்கும் ‘பிரஜா சக்தி’ தேசிய திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்காக 1,117.53 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 1,108.00 மில்லியன் ரூபாய் 13 பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன்,மீதித் தொகை சிறப்புத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் விவசாயம்,நன்னீர் மீன்பிடித் தொழில் மற்றும் சிறு அளவிலான வணிகங்களுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படும்.

பேரிடர் குறைப்புத் திட்டங்களின் கீழ் ஹோமாகம,சீதாவக்க மற்றும் மஹரகம பகுதிகளில் ஆறுகளைச் சுத்தப்படுத்துதல் மற்றும் சிறிய பாதைகளை அபிவிருத்தி செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும். விளையாட்டுப் பண்பாட்டை உருவாக்குவதற்காகப் பாடசாலை மற்றும் பொது விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய 4 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன்,39 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குத் தலா 3 இலட்சம் ரூபாய் வீதம் வழங்கி தெஹிவளை, மஹரகம, ஹோமாகம மற்றும் திம்பிரிகஸ்யாய ஆகிய பகுதிகளில் மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்படும்.

இது தவிர,புத்தசாசன,மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு,சுற்றாடல் அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஆகியவற்றின் ஊடாக விகாரைகள், மைதானங்கள் மற்றும் நீதிமன்றக் கட்டிடங்களை அபிவிருத்தி செய்யும் பணிகளும் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கொழும்பு மாவட்டத்தின் பரவலாக்கப்பட்ட மூலதன வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 184,775 பயனாளி குடும்பங்களுக்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த திட்டங்களின் எண்ணிக்கை 281 ஆகும். இதற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு 217.38 மில்லியன் ரூபாயாகும். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியாக 180.00 மில்லியன் ரூபாயும், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நிதியாக 37.38 மில்லியன் ரூபாயும் அடங்கும். இத்திட்டங்களின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 217.03 மில்லியன் ரூபாயாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *