முன்பிள்ளைப் பருவக் கல்வியிலிருந்தே பிள்ளைகளின் ஆளுமை மற்றும் தனித்திறன்களை வளர்ப்பது மிகவும் முக்கியமானது என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு சாரணர் தலைமையக கேட்போர் கூடத்தில் கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் “சுபிபி சாரணர் பிரிவு” உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் முதன்முறையாக முன்பள்ளிக் கல்வி முறைமையிலும் சாரணர் இயக்கத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த புதிய சாரணர் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கையின் முழுமையான கல்வி முறைமையையும் உள்ளடக்கும் வகையில் சாரணர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு இலங்கை சாரணர் சங்கத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை மையமாகக் கொண்டதும், செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதுமான கல்வி முறையை முன்பிள்ளைப் பருவத்திலிருந்தே நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், அண்மையில் வெளியிடப்பட்ட முன்பிள்ளைப் பருவக் கல்விக் கலைத்திட்டச் சட்டகம் மற்றும் ஆசிரியர் வழிகாட்டிக் கையேட்டின் அடிப்படையில் அனைத்து முன்பள்ளிகளும் ஒரே முறையான கட்டமைப்பின் கீழ் ஒழுங்குபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
3 முதல் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய பிரதி அமைச்சர், சாரணர் இயக்கத்தை மேம்படுத்துவதில் இலங்கை சாரணர் சங்கம் மேற்கொள்ளும் பங்களிப்பையும் பாராட்டினார்.
இந்நிகழ்வில் இலங்கை சாரணர் சங்கத்தின் தலைவர் ரன்சிறி பெரேரா, பிரதான சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நானாயக்கார உள்ளிட்ட சாரணர் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் புதிதாக சாரணர் இயக்கத்தில் இணைந்த முன்பள்ளிப் பிள்ளைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




