கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த மேலும் 2 சீன நாட்டவர்கள், சிகிரியா பகுதியில் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 23 ஆம் திகதி, கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டைச் சேர்ந்த குழுவினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஒரு சீன நாட்டவர் கடத்தப்பட்டார்.
பின்னர் அவரது உடல் எஹெலியகொட பகுதியிலுள்ள வனப்பகுதியில் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தக் கொலையை மேற்கொண்டு விட்டு அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்ற ஏனைய சந்தேகநபர்கள் குறித்து கொழும்பு குற்றவியல் விசாரணைப்பிரிவு விசாரணைகளை முன்னெடுத்திருருந்தது.
அதற்கமைய, சந்தேகத்திற்குரிய 3 சீன நாட்டவரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் கோரியிருந்தனர்.
இந்நிலையில், சிகிரியா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த 2 சீன நாட்டவர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்றையதினம் (29) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவு முன்னெடுத்துள்ளது.




