மன்னாரில் திடீர் தீயால் மக்கள் அவதி

1 View
1 Min Read

மன்னார் சின்னக்கடை கிராம அலுவலகர் பிரிவிலுள்ள குருசு நகர் பகுதியில் குப்பையில் திடீரென ஏற்பட்ட தீயினால் அதன் சுற்றாடல் பகுதியில் வாழும் மக்கள் புகை மண்டலத்திற்குள் அகப்பட்டு தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் தற்பொழுது நிலவி வரும் கடும் வெயிலால் குப்பைக்குள் கிடந்த கண்ணாடிகளில் சூரிய ஒளி ஈர்ப்பால் இத் தீ உருவாகியிருக்கலாம் என்ற சந்தேகமும் எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சனிக்கிழமை (22) மாலை நான்கு மணியளவில் மன்னார் சின்னக்கடை கிராம அலுவலகர் பிரிவிலுள்ள குருசு நகர் பகுதியில் மன்னார் நகர சபை தினசரி குப்பைகளை கொட்டும் பகுதியிலேயே இத்தீச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக தெரிய வருவதாவது; மன்னார் நகர சபைக்கு சொந்தமான 12 ஏக்கரில் 5 ஏக்கரில் மன்னார் நகர சபை தினசரி தனது பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை இந்த இடத்தில் கொட்டி வருகின்றது.

இந்த நிலையில் சம்பவம் அன்று திடீரென இக்குப்பையிலிருந்து தீ உருவாகி சுற்றாடலிலுள்ள பகுதி கடும் புகையினால் சூழப்பெற்றமையால் அச்சுற்றாடலில் வாழும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் புகையின் காரணமாக இருக்க முடியாது அவ்விடத்திலிருந்து உடன் வெளியேறிய துர்பாக்கிய நிலை இடம்பெற்றது.

இச்சம்பவத்தையிட்டு மன்னார் அனர்த்த முகாமைத்துவ பிரிவு பாதுகாப்பு படையினர் தீயணைக்கும் படையினர் மற்றும் மன்னார் நகர சபை தீ அணைப்பதில் தீவிரமாக செயற்பட்டதாகவும் தீயையை அணைத்தபோதும் இதனால் எற்பட்ட புகையில் இருந்து மக்கள் மீட்சிப்பெற நீண்ட நேரம் ஆனது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *