வழமைக்குத் திரும்பியது பொலிஸ் நற்சான்றிதழ் கணனி கட்டமைப்பு

1 Min Read

பத்தரமுல்ல, சுஹுருபாய கட்டடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள பொலிஸ் சான்றிதழ் பிரிவின் கணனி தரவுக் கட்டமைப்பு மீண்டும் முழுமையாகச் சீரமைக்கப்பட்டு வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (20) பி.ப. 12.50 மணி முதல் இந்தக் கணனி தரவுக் கட்டமைப்பு செயலிழந்திருந்ததன் காரணமாக, விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல், பின்னணி அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் போன்ற அனைத்துப் பணிகளும் தற்காலிகமாக ஸ்தம்பித்திருந்தன.

இதனையடுத்து, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பிற்கு (ICTA) விடுக்கப்பட்ட அவசர அறிவித்தலின் கீழ், உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது இத்தரவுக் கட்டமைப்பு வெற்றிகரமாக மீளமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, பொதுமக்கள் தங்களது பொலிஸ் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை வழமையான ஒன்லைன் (Online) நடைமுறைகளைப் பின்பற்றி இனிமேல் சமர்ப்பிக்க முடியும் எனப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கணனி கட்டமைப்பு செயலிழந்திருந்த காலப்பகுதியில் clear.application@police.gov.lk எனும் தற்காலிக மின்னஞ்சல் முகவரி ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தற்காலிக மாற்று வழிமுறையைப் பயன்படுத்தி விண்ணப்பித்தவர்கள் அனைவரும், தற்போது கணனி கட்டமைப்பு வழமைக்குத் திரும்பியுள்ளதால், வழமை போன்று தங்களுக்குரிய கட்டணங்களைச் செலுத்தி, ஒன்லைன் தளம் மூலமாகத் தங்களது விண்ணப்பங்களை மீண்டும் ஒருமுறை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த அவசர அறிவித்தல் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு ஊடக நிறுவனங்களுக்கும் பொலிஸ் ஊடகப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *