அந்நியச் செலாவணி கையிருப்பு இலக்கை அடையாவிட்டால் உண்மையான போர் தொடங்கும்” –முன்னாள் ஜனாதிபதி ரணில் எச்சரிக்கை

Admin
By
Admin
1 Min Read

நாட்டின் தற்போதைய அந்நியச் செலாவணி கையிருப்பு 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற மட்டத்தில் இருப்பதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் இது 8 பில்லியன் டொலர்களாக உயரும் என மத்திய வங்கி கணித்துள்ளதாகவும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, குறித்த அந்நியச் செலாவணி கையிருப்பு இலக்கை அடையாவிட்டால் உண்மையான போர் தொடங்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொது நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது நூலுக்கு ‘இரண்டு யுத்தங்களுக்கு தோள்கொடுத்த’ என்று பெயரிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய ரணில், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை குறிப்பிட்ட அளவுக்கு உயர்த்தத் தவறினால், அதுவே நாட்டை மீண்டும் ஒரு உண்மையான போருக்குள் தள்ளும் என்று தெரிவித்தார்.

எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவதாகவும், அது பலருக்குக் கசப்பாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

தற்போது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற மட்டத்தில் இருப்பதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் இது 8 பில்லியன் டொலர்களாக உயரும் என மத்திய வங்கி கணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் 15 பில்லியன் டொலர்களை எட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதன்படி, இன்னும் 7 பில்லியன் டொலர்கள் குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஏதேனும் ஒரு வழியில் 1 பில்லியன் டொலரைத் திரட்டினாலும் கூட, இன்னும் 6 பில்லியன் டொலர் பற்றாக்குறை தொடர்ந்து நிலவுவதாகத் தெரிவித்தார்.

இந்தப் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் இதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான திட்டத்தையும் தயாரிக்கவில்லை என்றும், இது தொடர்பாக பாராளுமன்றத்திலோ அல்லது அதற்கு வெளியிலோ எந்தவொரு தீவிரமான கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *