இலங்கையில் நிலவும் எல் நினோ வானிலை தாக்கத்துடன் தொடர்புடைய வறட்சியான காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் 25,563 குடும்பங்களைச் சேர்ந்த 81,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
அம்பாறை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களே பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள 22 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள பகுதிகளில், ஒருவருக்கு நாளாந்தம் வழங்கப்படும் குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைக்கான நீரின் அளவு 6 லீட்டரில் இருந்து 15 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக தற்போது 324 நீர்த்தாங்கி வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்குச் சொந்தமான மேலதிக நீர்த்தாங்கிகளும் பயன்படுத்தப்படவுள்ளன.
குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் மக்கள் உடனடியாக தங்களது கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்து தேவையான உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, தற்போது நிலவும் எல் நினோ காலநிலை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வரை நீடிப்பதற்கான சாத்தியக்கூறு 97 சதவீதமாக அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மாதத்தில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மழை அற்ற வறட்சியான வானிலை தொடர்ந்து நிலவும். டுத்த ஆண்டின் பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களில் மழை கணிசமாகக் குறைந்து வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் மனித உடலால் தாங்க முடியாத அளவுக்கு இந்த நிலைமை செல்லக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
மேலும், வறட்சியால் ஏற்படும் அனர்த்தங்களுக்கும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கடும் மழைக்கும் நிவாரணம் வழங்குவதற்காக 4.8 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிலையில், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் நினோ வானிலை மாற்றத்தால் உருவாகும் வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தடையின்றி நீர் விநியோகத்தை உறுதி செய்ய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.




