விரும்பினால், உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தலாம்
நீதிமன்றம் வழங்கும் தீர்மானம் செயற்படுத்தப்படும்
எதிர்க்கட்சியினர் கற்பனை செய்வதைப்போன்று 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பேயோ, பிசாசோ அல்லவென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நீதித்துறையில் பல்வேறு காத்திரமான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் நிலையில் சட்டத்தை சீர்குலைத்து அரசியல் செய்ய முயற்சிக்க வேண்டாமென, எதிர்க்கட்சியினரைக் கேட்டுக் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அச்சமடையும் அளவுக்கு அரசியலமைப்பின் 22 வது திருத்தம் கறுப்புப் பேய் அல்ல என்பதை சபையில் உறுதியாகத் தெரிவித்த அவர், போலியான குற்றச்சாட்டுக்கள், திரிபுபடுத்தப்பட்ட விடயங்கள் மற்றும் சுய நலத்தால் 22 தொடர்பில் தவறான நிலைப்பாட்டை ஒரு தரப்பினர் தேசிய , சர்வதேச மட்டத்தில் தோற்றுவித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
அந்த வகையில், ஐ.நா. சபையின் விசேட பிரதிநிதி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எவரும் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தலாம் என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், இது தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு முறையாக செயற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27/2இல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2025.12.31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நீதவான் நீதிமன்றங்களில் 753093 வழக்குகள், மாவட்ட நீதிமன்றங்களில் 263472 , மேல் நீதிமன்றங்களில் 28134 ,சிவில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் 6763 , வாணிப மேல் நீதிமன்றத்தில் 4302 , மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 5038 , உயர் நீதிமன்றத்தில் 4724 வழக்குகள் என்ற அடிப்படையில் நீதிமன்ற கட்டமைப்பில் மொத்தமாக 1065256 வழக்குகள் நிலுவையில் உள்ளன.நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில், மகாநாயக்க தேரர்களுக்கு ஒரு தரப்பினர் தவறான தகவல்களை வழங்கியுள்ளனர். மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து இது தொடர்பில் தெளிவு படுத்தினோம். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனுடையதாக அமைந்தால் இதனை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டு மகாநாயக்க தேரர்கள் ஆசீர்வாதங்களையும் வழங்கினர்.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் ஒரு தரப்பினர் சர்வதேச அமைப்புகளுக்கும் தவறான தகவல்களையே முன்வைத்துள்ளனர். ஐ.நா. சபையின் விசேட பிரதிநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த அறிக்கைக்கு பதிலளிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.




