பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை தற்போதைய ஆட்சிக்குச் சிறந்த வழிகாட்டி

2 Min Read

கியூபா புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை முறை மற்றும் கியூபா மக்களின் சுதந்திரப் போராட்டம் ஆகியவை தற்போதைய அரசியல் சூழலுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக அமைகின்றன என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பிடல் காஸ்ட்ரோவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, சோசலிச இளைஞர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘நூற்றாண்டு கண்ட புரட்சி ஒளி – பிடல்’ எனும் சிறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி, இலங்கை மன்றம் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கியூபா மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக, அந்நாட்டு மக்கள் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற கடுமையான பற்றாக்குறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இருப்பினும், இத்தகைய கடினமான சூழ்நிலையிலும் கியூபா மக்கள் தாங்கள் வென்றெடுத்த சுதந்திரத்தை ஒருபோதும் காட்டிக்கொடுக்காமல் உறுதியுடன் நிற்கின்றனர். பிடல் காஸ்ட்ரோவின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன.ஒரு நாட்டில் புதிய சமூக மாற்றத்தை ஏற்படுத்திப் புதிய பாதையில் பயணிக்கும்போது, மக்கள் தாங்கள் பெற்றெடுத்த வெற்றிகளையும் உரிமைகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும். இலங்கையிலும் அத்தகையதொரு சமூக மாற்றத்திற்காகத் தேர்தல்கள் மூலம் மக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை வழங்கி ஆட்சியை மாற்றியுள்ளனர்.

ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியை மக்கள் தங்கள் வாக்களிப்பின் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர். இன்றைய அரசியலில் பலர் புகழுக்காகவும், சலுகைகளுக்காகவும், அதிகாரத்தின் மீதான பேராசையினாலும் ஊழல்வாதிகளாக மாறுகின்றனர். சிறிய உதவிகளைக்கூட விளம்பரத்திற்காக முகநூலில் பதிவிடும் நிலை காணப்படுகிறது. கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவின் பெயரில் எந்தவொரு நினைவுச் சின்னங்களோ அல்லது கட்டடங்களோ கிடையாது. ஆனால் இலங்கையில் பாடசாலைகளுக்குச் சென்றால் கூட முன்னாள் அரசியல்வாதிகளின் பெயர்களே பொறிக்கப்பட்டுள்ளன. தற்போது அரசாங்கத்தை நடத்தும் ஒரு கட்சியாக மாறியுள்ள சூழலில், எளிமையான வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு பிடலின் வாழ்க்கை முறையே மிகச்சிறந்த முன்மாதிரியாகும் என அவர் குறிப்பிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *