இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முதன்மையான செயற்பாடுகளில் ஒன்றான இந்துசமய அறநெறிக் கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இளம் இந்துச் சிறார்களின் இதயங்களில் உள்ள தெய்வீகத் தாமரையை மலரச் செய்து அவர்களின் ஆளுமையும் திறமைகளும் மலர்ந்து விரிவடைய வைக்கும் கல்வியை வழங்கி இளம் சந்ததியினரை நல்வழிப்படுத்தி ஒழுக்க விழுமிய, பண்பாடு மிக்க ஒரு எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் இலட்சிய நோக்குடன் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் ஓர் அம்சமாக அறநெறிப்பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன்களை வெளிக்கொணர்ந்து விருத்திசெய்யும் நோக்குடன் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே பேச்சாற்றல், கதாப்பிரசங்கம், நீதிநூல், சொல்லாடல் எழுத்தாற்றல், சித்திரம், வில்லுப்பாட்டு, பண்ணிசை, நாடகம், பரதநாட்டியம் ஆகிய 10 துறைகளில் இவ்ஆக்கத்திறன் மதிப்பீடுகள் நடாத்தப்பட்டன.
இதன் 2024ஆம் ஆண்டுக்குரிய தேசிய ஆக்கத்திறன் விருதுகளுக்கான தெரிவுகள் இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே பிரதேச, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் இடம்பெற்றன.
இதில் வெற்றி பெற்ற இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது – 2024 விருது வழங்கும் வைபவம் நேற்று முன்தினம் (15) கொழும்பு, இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் பதில் அமைச்சர் கமகெதர திசாநாயக்க , மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தேசியமட்டத்தில் தெரிவான முதல் மூன்று இடங்களைப் பெற்ற 21 மாவட்டங்களைச் சேர்ந்த 312 மாணவர்களுக்கான விருதுகளும் பதக்கங்களும், சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஸ்ரீமத் அக்ஷராத்மானந்த சின்மியா மிஷன் சுவாமி ஸ்ரீமத் குணநந்த சரஸ்வதி மற்றும் வைத்தீஸ்வர குருக்கள், இராமச்சந்திர குருக்கள், ஜெகதீஸ்வரக் குருக்கள் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அநிருத்தனன் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.




