இலங்கைக்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் மிக முக்கிய ஐந்து கடத்தல்காரர்களில் ஒருவராகக் கருதப்படும் ‘ஷிரான் பாசிக்’ (Shiran Basik) கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
தெஹிவளை, களுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதான இவர், சர்வதேச பொலிஸாரால் (Interpol) சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட ஒரு தேடப்படும் குற்றவாளியாவார்.
ஈரான் – அமெரிக்க மோதலின் போது, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் காட்சிகளைத் தனது கையடக்கத் தொலைபேசியில் வைத்திருந்த குற்றத்திற்காக அவர் அங்கு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவரை விசாரணைக்கு உட்படுத்த அமெரிக்காவும் ஆர்வம் காட்டிய நிலையில், இன்று இரவு 8.48 மணியளவில் அபுதாபியில் இருந்து எயார் அரேபியா விமானம் மூலம் அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அவரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் பலத்த பாதுகாப்புடன் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு அமீரகத்திற்குத் தப்பிச் சென்ற இவர்,
கடந்த மே 26 ஆம் திகதி துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கு ஒரு பெரும் கோடீஸ்வரனைப் போல வேடமிட்டுத் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினர் இவரைப் பொறுப்பேற்று மேலதிக விசாரணைகளுக்காக நாட்டிற்கு தற்போது அழைத்து வந்துள்ளனர்.
வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இந்த சந்தேகநபர், அதன் மூலம் ஈட்டிய கறுப்புப் பணத்தை இலங்கையின் கடற்கரையோரங்களில் உள்ள ஏழை மக்களின் காணிகளைப் பயன்படுத்தி பாரிய ஹோட்டல்களை நிர்மாணிப்பதன் மூலம் சலவை செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச ரீதியில் தேடப்பட்டு வந்த இவரைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கையைப் போலவே அமெரிக்காவும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவரது வருகையைத் தொடர்ந்து இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் நிதி மோசடி விசாரணைகள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




