ஹோமாகம 132/33 kV துணைமின் நிலையத்தை அமைப்பதற்கான பணிகளின் ஆரம்ப நிகழ்வு

3 Min Read

இலங்கையின் மின் பரிமாற்ற கட்டமைப்பை நவீனமயமாக்குவதையும், தேசிய மின் அமைப்பில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை எளிதாக இணைப்பதையும் நோக்கமாகக் கொண்ட ‘மின் அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒருங்கிணைப்பு திட்டம்’ (Power System Strengthening and Renewable Energy Integration Project – PSSREIP) நேற்று (13) உத்தியோகபூர்வமாகத் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் கீழ், ஹோமாகம 132/33 kV துணைமின் நிலையத்தை அமைப்பதற்கான பணிகளின் ஆரம்ப நிகழ்வு, துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் இடம்பெற்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் சலுகைக் கடன் நிதியின் கீழ் 328.25 மில்லியன் டொலர் பாரிய முதலீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டம், இலங்கை மின்சார தனியார் நிறுவனமான LECO, இலங்கை மின்சார சபையின் வாரிசு நிறுவனங்களான முழுமையாக அரசுக்குச் சொந்தமான National Transmission Network Services Provider (NTNSP) மற்றும் National System Operator (NSO) ஆகிய இரு நிறுவனங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வில் NTNSP நிறுவனத்தின் தலைவர் நுசித் குமாரதுங்க, அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி என். எஸ். வெத்தசிங்க, அதன் ஆலோசகர் புபுது நிரோஷன் உள்ளிட்ட எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள், வாரிசு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஹோமாகம, கொட்டாவ, மாலபே மற்றும் ஹொரணை ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள விரைவான வளர்ச்சி காரணமாக தொழில்துறை மற்றும் வர்த்தக மின் தேவை வேகமாக அதிகரித்துள்ளதுடன், அந்த மின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய ஹோமாகமவில் அமைக்கப்படும் இப்புதிய துணைமின்நிலையம் ஊடாக வாய்ப்பு ஏற்படும்.

தற்போது இப்பகுதிக்கு மின்சாரம் வழங்கும் பன்னிப்பிட்டிய மற்றும் கொஸ்கம மின்கம்பி துணைநிலையங்களில் நிலவும் அதிகப்படியான சுமையை (Overloading) குறைக்கவும் இதன் மூலம் முடியும்.

அதேபோல் இத்திட்டத்தின் 1B தொகுப்பின் கீழ் ஹோமாகமவைப் போன்றே நீர்கொழும்பு பகுதியிலும் 132/33 kV புதிய துணைமின்நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

நீர்கொழும்பு பகுதியைச் சார்ந்த சுற்றுலா மற்றும் தொழில்துறை வளர்ச்சியால் அதிகரித்துள்ள மின் தேவையைப் பூர்த்தி செய்ய இதன் மூலம் வாய்ப்பு ஏற்படும். அத்துடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மற்றும் முன்மொழியப்பட்ட Aero City திட்டத்திற்குத் தேவையான மேலதிக மின்சாரத்தை வழங்கவும் இது வழியமைக்கும்.

இதன்போது நாட்டின் தேசிய மின் கட்டமைப்பை விரிவுபடுத்தி தேவையான மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய இது வழியமைப்பதுடன், மின் அமைப்பின் நம்பகத்தன்மையை மேம்படுத்தி விநியோகப் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த முடியும்.

மேலும், எதிர்கால புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைப்பதற்கான வலுவான அமைப்பை உருவாக்குவதில் இதுவொரு முன்னோடிப் படியாகவும் அமையும்.

இதற்கு மேலதிகமாக, மின்னழுத்தச் சிக்கல்களைக் (Voltage Issues) குறைத்து தொழில்துறை, வர்த்தகம், சுற்றுலாத் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் வாய்ப்பளிக்கும்.

நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட ஹோமாகம துணைமின்நிலையம் மற்றும் நீர்கொழும்பு துணைமின்நிலையம் ஆகியன எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படவுள்ளதுடன், National Transmission Network Services Provider Private Limited (NTNSP) நிறுவனத்தினால் மேலும் பல துணைமின்நிலையங்கள் மற்றும் மின் கடத்தல் பாதைகளை அமைக்கவும் அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, மீரிகமவில் 220/33 kV துணைமின்நிலையம் மற்றும் பேலியகொடை பகுதியில் 132/33 kV துணைமின்நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

78 கி.மீ. நீளத்தைக் கொண்டதாக ஹம்பாந்தோட்டையிலிருந்து மாத்தறை வரை 132 kV இரட்டைச் சுற்று மின் கடத்தல் பாதை (Double Circuit Transmission Line) அமைக்கப்படவுள்ளதுடன், ஏனைய துணைமின்நிலையங்களுக்கு LILO (Line-In Line-Out) இணைப்புகளுடன் 132 kV துணைமின்நிலையம் மற்றும் 220 kV மின் கடத்தல் பகுதிப் பாதைகளை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

களனி – கொடுகொட மின் பாதையிலிருந்து பேலியகொடை துணைமின்நிலையம் வரை LILO இணைப்பை வழங்கி, சுமார் 02 கி.மீ. நீளமுடைய 132 kV ஒற்றைச் சுற்று பூமிக்கடியிலான மின் கடத்தல் பாதையும் (Underground Transmission Line) நிறுவப்படும்.

அதேபோன்று கடந்த வாரம் கெரவலப்பிட்டியவிலிருந்து கொழும்பு துறைமுகம் வரை செல்லும் 220 kV பூமிக்கடியிலான மின் கடத்தல் பாதையின் நிர்மாணப் பணிகளும் தொடங்கப்பட்டன.

இவை அனைத்தின் மூலமும் நம்பகமான மின் அமைப்பும் ஸ்திரமான ஆற்றல் எதிர்காலமும் நோக்கிய பயணம் மேலும் வலுப்பெறும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *