இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறல்களையும் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் செயற்பாடுகளையும் கண்டித்து நேற்று (29) புதன்கிழமை வடபகுதி தீவகப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
குறிகட்டுவான் இறங்குதுறை கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள், இந்திய மீனவர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு அவசர மகஜரையும் அனுப்பினர்.இந்திய இழுவைப் படகுகளின் சட்டவிரோத அத்துமீறலால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்களும் அழிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.
குறித்த போராட்டகாரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
நெடுந்தீவு, நயினாதீவு, வேலணை, எழுவைத்தீவு, அனலைதீவு, யாழ்குடா, பாக்குநீரிணை மற்றும் மன்னார் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் கடல்வளம் மற்றும் கடல்சார் மரபைப் பாதுகாப்பதற்காக அரசின் உடனடி தலையீடு அவசியம்.
பல தசாப்தங்களாக இந்திய இழுவைப் படகுகள் எமது கடற்பரப்பிற்குள் அத்துமீறி அடிமடி இழுவை மீன்பிடியில் ஈடுபடுகின்றன.இது வெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை மட்டுமன்றி கடலடித் தளங்கள், பவளப் பாறைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்கப் பகுதிகளை அழிக்கும் செயற்பாடாகவும் உள்ளது.இந்த நடவடிக்கைகள், வடக்கின் கடல்சார் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் கடல்வள உரிமைகளுக்கு நேரடியான அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.
காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த இந்திய இழுவை மடி விசைப்படகுகள், கடந்த ஜூலை 16 முதல் 18 ஆம் திகதி வரை மூன்று நாட்களில் தீவகத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய மீனவர்களின் ஐந்து கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நண்டு வலைகளை இழுத்தழித்து சேதப்படுத்தியுள்ளன. “ஒரு நாட்டின் இறைமை இராஜதந்திரத்தாலும் ஆயுதப் படைகளாலும் மட்டும் பாதுகாக்கப்படுவதில்லை. மக்களின் நம்பிக்கை, மனவுறுதி, பங்கேற்பு மற்றும் நாட்டின் மீதான பற்றுறுதியாலும் அது பாதுகாக்கப்படுகிறது.இந்தப் பிரச்சினைக்கு தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசுகள் உறுதியான தீர்வை வழங்கத் தவறியுள்ளன.இதனால், வடக்கு மீனவர்களிடையே ஏமாற்றமும் நம்பிக்கையின்மையும் அதிகரித்துள்ளன.இலங்கை–இந்திய இராஜதந்திர உறவுகளின் பெயரில் வடக்கு மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பலியிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.




