நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று மோகினி நீர்வீழ்ச்சிப் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து, கண்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி இன்று (30) உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் உயிரிழந்தவர் நல்லதண்ணி கீழ்ப் பகுதி, மறே தோட்டத்தில் வசித்து வந்தவரும், மஸ்கெலியா புனித ஜோசப் கல்லூரியின் 8 ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்தவருமான செல்வம் திஷ்னா என்ற மாணவியாவார்.
கடந்த ஜூலை 22 ஆம் திகதி காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவத்தில், 3 பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
முச்சக்கர வண்டியின் சாரதியும், அதிலிருந்த மற்றொரு நபம் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து இடம்பெற்ற சமயத்தில் குறித்த முச்சக்கர வண்டியில் ஐந்து பேர் றுப்பினர்களே பயணித்துள்ளனர்.
முச்சக்கர வண்டி அதிக வேகத்துடன் சென்றுகொண்டிருந்த வேளையில், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் நல்லதண்ணி பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி இன்று உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.




