ஏழு ஜனாதிபதி மாளிகைகள் இருந்தும் ஜனாதிபதி அநுர எதனையும் பயன்படுத்துவதில்லை

2 Min Read

நாட்டில் தற்போது ஏழு ஜனாதிபதி மாளிகைகள் உள்ளபோதும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எந்தவொரு ஜனாதிபதி மாளிகைகளையும் பயன்படுத்துவதில்லை. எனினும் அவற்றை பாதுகாப்பதற்கு முறையான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன என பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அவ்வாறே நிறைவேற்றி வருவதாக குறிப்பிட்ட பிரதமர், அமைச்சர்கள் எவரும் உத்தியோகபூர்வ இல்லங்களில் வசிப்பதில்லை என்றும் அந்த இல்லங்கள் அரச நிர்வாக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகைகளை பயனுறுதிமிக்க வகையில் பயன்படுத்துவதற்கு உரிய திட்டங்கள் பொதுநிர்வாக அமைச்சினால் முன்னெடுக்கப்படுகிறது என்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் சகல விடயங்களையும் உண்மை என்று ஏற்றுக்கொண்டு எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பக் கூடாது என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தி எம் பி சமிந்த விஜேசிறி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது 07 ஜனாதிபதி மாளிகைகள் காணப்படுகின்றன. கொழும்பு கோட்டை, கண்டி, நுவரெலியா, கதிர்காமம், அநுராதபுரம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளில் ஜனாதிபதி மாளிகைகள் அமையப்பெற்றுள்ளன.

ஜனாதிபதி மாளிகை பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்காக 2019 ஆம் ஆண்டு 77.2 மில்லியன் ரூபா, 2020 ஆம் ஆண்டு 34.7 மில்லியன் ரூபா, 2021 ஆம் ஆ ண்டு 28.8 மில்லியன் ரூபா, 2022 ஆம் ஆண்டு 25.6 மில்லியன் ரூபா,2023 ஆம் ஆண்ட 37.4 மில்லியன் ரூபா, 2024 ஆம் ஆண்டு 24.7 மில்லியன் ரூபா, 2025 ஆம் ஆண்டு 10.5 மில்லியன் ரூபா, 2026 ஆம் ஆண்டு ( ஜனவரி – ஜூன்) 3.4 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த ஜனாதிபதி மாளிகைகளை பயன்படுத்துவதில்லை. இருப்பினும் இவை மக்களின் சொத்து. ஆகவே அவற்றை பாதுகாப்பதற்கு முறையான வகையில் பராமரிக்க வேண்டும். இந்த மாளிகைகளை பயனுறுதிமிக்க வகையில் பயன்படுத்துவதற்கு உரிய திட்டங்கள் பொதுநிர்வாக அமைச்சினால் முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதி மாளிகைகளை ஜனாதிபதி பயன்படுத்துவதில்லை. அவ்வாறாயின் ஏன் பராமரிப்புக்கு நிதி ஒதுக்கப்படுகின்றது என்று எதிர்க்கட்சியினர் கேள்வியெழுப்புகிறார்கள். பராமரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் அரச சொத்து வீணடைவதற்கு அது வழி வகுக்கும் என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *