நாட்டில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களில் அதிகமானோர், நாட்டு மருந்துகளை பயன்படுத்தி காலம் தாமதித்து வைத்தியசாலைக்கு சென்றவர்களே என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந் நிலையில் காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைகளை மேற்கொள்வதில் பொதுமக்கள் உரிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
டெங்கு நோய் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அதன் மூலம் ஏற்படும் மரண வீதத்தைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் முஜிபுர் ரஹ்மான் எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
முஜிபுர் ரஹ்மான் எம்.பி தமது கேள்வியின் போது, கொழும்பு மாவட்டத்தி்ல் டெங்கு நோய் பாரியளவில் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு
டெங்கு: நாட்டு மருந்துகளை பயன்படுத்தி…
ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளர்கள் இனம் காணப்பட்டு வருகின்றார்கள். கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில், டெங்கு நோய் தொற்றிய சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு உள்ளூராட்சி மன்றங்களுக்கே அதிகம் காணப்படுகிறது. எனினும் குப்பைகளை அகற்றும் பொறுப்பை உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் மந்த நிலையிலேயே மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சுகாதாரத் துறை அதிகாரிகளும் பரிசோதனை அதிகாரிகளும் வீடு வீடாகச் சென்று டெங்கு தொடர்பான சோதனைகளை மேற்கொண்டு தண்டப்பணம் விதித்து வருகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கை மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகிறது. அதனால் இந்த உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பில் மேற்கொள்ள போகும் நடவடிக்கை என்ன? என அவர் கேள்வி எழுப்பினார்.
அக்கேள்விக்கு அமைச்சர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், மழையுடனான காலநிலை அதிகரித்துக் காணப்படும் ஜூன், ஜூலை மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கம்பஹா, புத்தளம் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மக்களின் கூட்டு முயற்சியால், டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு ஓரளவு குறைந்து வருகிறது. குறிப்பாக கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகிறது.
ஒருவாரத்துக்கு முன்னர் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டனர். தற்போது கம்பஹா மாவட்டத்தில் அந்த எச்சரிக்கை நிலை காணப்படுகிறது.
நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) 19ஆயிரத்து 43 இடங்களில் டெங்கு பரிசோதனைகள் மேற்கொண்டதில் 445 இடங்களில் டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் இனம் காணப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் மாதம் இறுதியாகும்போது இந்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அதனால் இந்த எச்சரிக்கையில் இருந்து மக்கள் விலகி, அது தொடர்பில் கவனம் இல்லாத நிலைக்கு செல்லக்கூடாது என்பதாலேயே நாம் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்படும் எண்ணிக்கையை பகிரங்கப்படுத்தி வருகிறோம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




