பிலிப்பைன்சின் தலைநகர் மணிலாவில் இடம்பெற்று வரும் 33ஆவது ஆசிய பிராந்தியக் கூட்டமைப்பின் (ARF) மாநாட்டிற்கு இடையே, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உலக நாடுகளின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறிப்பாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் (Marco Rubio) இன்று (23) இடம்பெற்ற சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்துக் குறுகிய கலந்துரையாடலொன்றை அவர் முன்னெடுத்தார்.
பிரேசில் வெளிவிவகார அமைச்சர் மௌரோ வியெய்ராவைச் (Mauro Vieira) சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத், இலங்கை மற்றும் பிரேசில் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவை விவசாயத் துறையூடாக மேலும் வலுப்படுத்துவது குறித்து உறுதிப்படுத்தினார்.
இலங்கையின் கரும்புத் தொழில்துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்குப் பிரேசில் முன்வந்துள்ளமைக்கு அமைச்சர் இதன்போது தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். விவசாயத் துறையில் சர்வதேச ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கையின் உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergey Lavrov) உடனான சந்திப்பும் மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்ததாக தெரிவித்துள்ள அமைச்சர், இச்சந்திப்பில், இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையே தற்போது நிலவும் இருதரப்பு ஒத்துழைப்புக்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கான முன்னுரிமை முயற்சிகள் குறித்து ஆராயப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, 2027 ஆம் ஆண்டில் இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடியதுடன், அதற்காக இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.




