2030க்குள் 70 வீத புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியே அரசின் இலக்கு

2 Min Read

இலங்கையின் சூரிய மின்கல உற்பத்தி 2026ஆம் ஆண்டுக்குள் 1,700 மெகாவாட்டாக அதிகரிக்கப்படும் என்றும் 2030ஆம் ஆண்டுக்குள் 70 வீதம் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியே அரசாங்கத்தின் இலக்கு என்றும் மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஒரு வருடத்திற்குள் நூற்றுக்கணக்கான மெகாவோட் அளவில் சூரிய மின்கல உற்பத்தி அதிகரித்திருப்பதானது தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் சூரிய மின் திட்டங்கள் ஊக்குவிக்கப்படவில்லை என்ற அரசியல் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதாக அமைந்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று ரவி கருணா நாயக்க எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வள அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த மின்சார உற்பத்தியில் 70 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய மின்சார சட்டத்தின் கீழ் மின்சார சேவைகள் மறுசீரமைக்கப்படுவதுடன், தேசிய மின்சார சேமிப்பு வசதிகளும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. தேசிய மின்வலையமைப்புடன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 1,200 மெகாவோட் திறன் கொண்ட பற்றரி மின்சார சேமிப்பு அமைப்புகளை (BESS) இணைக்கும் பாரிய திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்புகள் பகல் நேரத்தில் உற்பத்தியாகும் அதிகப்படியான சூரிய மின்சாரத்தை சேமித்து, இரவு நேர உச்ச மின் தேவையின்போது விநியோகிக்கப் பயன்படுத்தப்படும்.அத்துடன் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மேலதிகமாக 560 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்வலையமைப்புடன் இணைக்கப்படும்.

இந்த மின்கல மின்சார சேமிப்பு அமைப்புகள் முழுமையாக செயற்பாட்டுக்கு வந்த பின்னர், தினமும் மாலை நேர உச்ச தேவைக்காக நான்கு மணி நேரம் வரை சேமிக்கப்பட்ட மின்சாரத்தை வழங்கும் திறன் ஏற்படும்.

இதன் மூலம் அதிகளவு செலவாகும் எரிபொருள் மூலமான மின் உற்பத்தி நடவடிக்கைகள் கணிசமாகக் குறைவடையும். அதேவேளை, நாட்டின் உயர் மின்னழுத்த மின் பரிமாற்ற வலையமைப்பும் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *