ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பரஸ்பர தாக்குதல்கள் தொடரும் நிலையில் ஹோர்முஸ் நீரிணையின் தென் பகுதியில் இரு எண்ணெய் கப்பல்கள் வெடித்து செயலிழந்ததாக ஈரான் அறிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பற்ற சூழல் நீடிக்கும் பின்னணியில் எண்ணெய் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஈரான் மீது தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாகவும் அமெரிக்கா நேற்று (20) தாக்குதல்களை நடத்தியதோடு பிராந்திய நாடுகள் மீதான ஈரானின் பதில் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ஜோர்தானின் அக்பா விமானநிலையத்தில் அமெரிக்க விமானத்தை இலக்கு வைத்து பலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை தெரிவித்தது. அதேபோன்று குவைட்டில் அல் அதிரி முகாம் மற்றும் அல் அல் சலம் விமானத் தளம் மற்றும் சிரியாவில் அமெரிக்க இராணுவ நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.
பஹ்ரைனிலும் நேற்று காலை சைரன் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதோடு, ஈரானிய தாக்குதல் ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாக குவைட் தெரிவித்தது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த மாதம் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டபோதும் இரு தரப்புக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்கள் மீண்டும் முழு அளவில் போராக வெடிக்கும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. குறிப்பாக சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் தீர்க்கமாக உள்ள குறுகிய கடல் வழி பாதையான ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்தும் முயற்சியிலேயே இந்த மோதல் தீவிரம் அடைந்துள்ளது.
‘ஹோர்முஸ் நீரிணையின் முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் வணிகக் கப்பல்களைத் தாக்கும் ஈரானின் திறனைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய தாக்குதல் அலை நடத்தப்பட்டது’ என்று அமெரிக்க மத்திய கட்டளையகம் நேற்று அறிவித்தது. இந்நிலையில் நேற்று காலையில் ஈரானின் பல நகரங்களிலும் அமெரிக்காவின் ஏவுணை தாக்குதல்கள் இடம்பெற்றதாக ஈரானின் அரச சார்பு செய்தி நிறுவனமான தஸ்னிம் குறிப்பிட்டது.
ஈரானின் தப்ரீஸ், சபஹார், கோனாரக், பந்தர் மஹ்ஷஹர் மற்றும் பந்தர் இமாம் கொமேனி ஆகிய பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக, அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஈரான் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தும் வரையில் அதன் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ருபியோ தெரிவித்துள்ளார்.
‘ஹோர்முஸ் நீரிணை ஒரு சர்வதேச கடல் வழித்தடமாகும். ஆனால் அந்த சர்வதேச கடல் வழித்தடத்தில் பயணிக்கும் கப்பல்களுக்கு எதிராக ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஒரு சர்வதேச கடல் வழித்தடத்தின் மீது கட்டுப்பாட்டை செலுத்துவதில் ஈரான் தொடர்ந்து வலியுறுத்தும் வரை, அதற்கு நாங்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும். இருப்பினும், அமெரிக்கா எப்போதும் ஒரு இராஜதந்திரத் தீர்வுக்குத் திறந்த மனதுடன் உள்ளது’ என்று ருபியோ தெரிவித்துள்ளார்.
எனினும் ஹோர்முஸ் நீரிணையில் ஓமான் கடற்கரைக்கு நெருக்கமாக கப்பல் ஒன்று தீப்பற்றி இருப்பதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு கடந்த ஞாயிறன்று கூறியது. இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பற்ற பகுதி என குறிப்பிடும் தெற்கு பகுதியின் ஊடாக பயணிக்க முயன்ற இரு கப்பல்கள் வெடித்து செயலிழந்ததாக ஈரான் புரட்சிக் காவல் படை நேற்று கூறியது.
இந்த கப்பல்கள் பயணிப்பதற்கு அமெரிக்கா ஊக்கம் அளித்திருந்ததாகவும் அது கூறியது. எனினும் இந்த கப்பல்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
பிராந்தியத்தில் அமெரிக்காவின் தாக்குதல் தொடரும் வரை இந்த நீரிணை பாதுகாப்பாக இருக்காது என்று அமெரிக்க புரட்சிக் காவல் படை குறிப்பிட்டுள்ளது. இந்த நீரிணை வழியாக ஒரு துளி எண்ணெயைக் கூட பாதுகாப்பாகக் கொண்டு செல்ல முடியாது என்று அது எச்சரித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹோர்முஸ் நீரிணை வழியாக நான்கு கப்பல்கள் மட்டுமே பயணித்தன. இது அதற்கு முந்தைய நாளில் பயணித்த எட்டு கப்பல்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவு குறைவாகும் என்று கப்பல் போக்குவரத்து தொடர்பான கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன. மேலும், வெள்ளிக்கிழமை முதல் குறைந்தது மூன்று எண்ணெய் தயாரிப்பு டேங்கர் கப்பல்களும், ஒரு மிகப் பெரிய மசகு எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பலும், எண்ணெய் ஏற்றுமதிக்காக ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைந்துள்ளன என்றும் அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் எண்ணெய் விலை நேற்று மேலும் 3 வீதம் அதிகரித்து பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 90 டொலர்களை தொட்டுள்ளது. இது கடந்த ஜூன் 11 தொடக்கம் மிகப்பெரிய அதிகரிப்பாக இருப்பதோடு கடந்த வாரத்தில் இருந்து 15.9 வீத அதிகரிப்பாகவும் உள்ளது.
இதேவேளை இந்த மோதல்களுக்கு மத்தியில் மற்றொரு அமெரிக்க படை வீரர் கொல்லப்பட்டுள்ளார். வடக்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ முகாமில் ஈரான் ஆளில்லா விமானத்தின் மூலம் வீசிய வெடிக்காத வெடிபொருள் ஒன்றை செயலிழக்கச் செய்யும் முயற்சியின்போதே இந்த படை வீரர் கொல்லப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த வெள்ளி அன்று ஜோர்தானில் ஈரான் நடத்திய தாக்குதலில் இரு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டு மேலும் ஒருவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி இந்தப் போர் வெடித்தது தொடக்கம் கொல்லப்பட்ட அமெரிக்க இராணுவத்தினரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 420 பேர் காயடைந்துள்ளனர்.




