– மண் பரிசோதனை மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகப் பாரிய திட்டம்
இலங்கை விவசாயத் துறையில் ஒரு புதிய தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த மற்றும் சீன பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (20) கொழும்பு கொவிஜன மந்திரய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தச்சந்திப்பின் போது, இலங்கையில் நவீன விவசாய இயந்திரங்களுக்கான விசேட மையமொன்றை நிறுவுவது தொடர்பில் சீனப் பிரதிநிதிகள் குழுவினர் மிகுந்த ஆர்வம் காட்டியதுடன், அதற்கான மேலதிக தகவல்களையும் அமைச்சரிடம் கோரியுள்ளனர்.
குறிப்பாக, இலங்கையின் மண் மாதிரிகளைப் பரிசோதனை செய்து, அதற்கேற்ப பயிர்ச்செய்கை முறைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க சீனத் தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதுடன், இதற்குப் பல்கலைக்கழக மட்டத்திலான ஆதரவைப் பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயத் திணைக்களத்தின் ஆலோசனையின்படி, இப்புதிய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைச் சாதாரண விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதற்குப் பிரதேச மட்டத்திலான கூட்டுறவுச் சங்கங்களை ஒரு பாலமாகப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள், ஏனைய சங்கங்கள் மற்றும் தனியார் துறையினரை ஒன்றிணைத்துச் செயற்படுவதன் மூலமே இந்தத் தொழில்நுட்ப மாற்றத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.
நெல் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கான நிலத் தயாரிப்பு, அறுவடைக்குப் பின்னரான இழப்புகளைத் தவிர்த்தல் மற்றும் விளைபொருட்களுக்குக் கூடுதல் மதிப்பினைச் சேர்த்தல் ஆகியவற்றுக்குத் தேவையான அதிநவீன இயந்திரங்களை இலங்கைக்குப் பெற்றுக்கொள்வதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
விவசாயத் துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டுமானால், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மிக அவசியமானது என அமைச்சர் லால் காந்தா இதன்போது சுட்டிக்காட்டினார். இவ்வாறான உயர் தொழில்நுட்ப இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், மிகக் குறைந்த செலவில் அதிக விளைச்சலைப் பெற்று விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த வேலைத்திட்டங்களை மிகவும் குறுகிய காலத்திற்குள் இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் விரைந்து முன்னெடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாகப் பணிப்புரை விடுத்துள்ளார்.




