பிரித்தானியாவின் பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்றுள்ளார்.
முன்னாள் பிரதமரான கீர் ஸ்டார்மர் (Keir Starmer) பக்கிங்ஹாம் அரண்மனையில் 3ஆம் சார்ள்ஸ் மன்னரைச் சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்ததைத் தொடர்ந்து இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
தமது கட்சியின் முடிவை ஏற்று கட்சி தலைமைப் பதவி மற்றும் பிரதமர் பதவிகளிலிருந்து விலகிய முன்னாள் பிரதமரிடமிருந்து கடந்த வெள்ளிக்கிழமை தொழிற்கட்சியின் தலைமைப் பொறுப்பை பர்ன்ஹாம் ஏற்றிருந்தார்.
அந்த வகையில் 4 வருடங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் இப்பதவியை வகிக்கும் 4ஆவது நபராகவும், கடந்த ஒரு தசாப்த காலத்திற்குள் இப்பதவிக்கு வரும் 6ஆவது நபராகவும் பர்ன்ஹாம் விளங்குகிறார்.
தொடர்ச்சியான அரசியல் தவறுகள் மற்றும் திடீர் கொள்கை மாற்றங்கள் காரணமாக, பதவியிலிருந்த பிரதமர் ஸ்டார்மர் பல தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சில அமைச்சர்களினதும் ஆதரவை இழந்ததைத் தொடர்ந்து, ஸ்டார்மருக்குப் பதிலாக பர்ன்ஹாமை நியமிக்கும் தெளிவான நோக்கத்துடன் அவரது ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு இடைத்தேர்தல் மூலமாகவே பர்ன்ஹாம் மீண்டும் பாராளுமன்றத்திற்குத் திரும்பினார்.
ஒரு மாதத்திற்கு முன்பே மீண்டும் பாராளுமன்றத்திற்குத் திரும்பிய கிரேட்டர் மான்செஸ்டரின் (Greater Manchester) முன்னாள் மேயரான இவர், தற்போது டவுனிங் வீதிக்குச் செல்லவுள்ளதுடன், அங்கு கூடியிருக்கும் ஊடகங்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய பின்னர் தனது அமைச்சரவையை அறிவிக்கவுள்ளார்.
கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட வேறு யாரும் முன்வராத நிலையில், எந்தவொரு போட்டியுமின்றியும் குறைந்தளவிலான ஆய்வுகளுக்கு மத்தியிலுமே பர்ன்ஹாம் பிரதமராக்கப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டில் ரிஷி சுனக்கிற்கும் இதே போன்றதொரு நிலை ஏற்பட்ட போதிலும், அவர் அதற்கு சில வாரங்களுக்கு முன்னர் லிஸ் ட்ரஸுக்கு (Liz Truss) எதிராகப் போட்டியிட்டிருந்ததுடன், அமைச்சரவை அனுபவத்தையும் கொண்டிருந்தார்.
பர்ன்ஹாம் இதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சரவை அமைச்சராகவும் பணியாற்றியிருந்த போதிலும், கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் பதவியைப் பொறுப்பேற்பதற்காக 2017 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்திலிருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




