– கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றியமைக்கும் பாரிய திட்டம்
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவை மாவட்டத்தைச் சுற்றுலாத்துறையில் சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், ‘பரக்கும் லெகசி’ (Parakum Legacy) எனும் விசேட அபிவிருத்தித் திட்டம் நேற்று (18) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிராமிய அபிவிருத்தி சமூகப பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில தலைமையில் இடம்பெற்ற சுமார் ரூ. 100 மில்லியன் செலவில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் மூலம், பொலன்னறுவையின் தம்மன்கடுவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அத்துமல்பிட்டிய மற்றும் முனியாண்டி ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நவீன சுற்றுலா கிராமங்களாக மாற்றியமைக்கப்படவுள்ளன.
‘பிரஜா சக்தி’ தேசிய வறுமை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இத்திட்டம் அமையவுள்ளது. இதன் கீழ் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட ரூ. 25,000 மில்லியன் நிதியின் கீழ், நாட்டின் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் ஆகக்குறைந்தது ஒரு அபிவிருத்தித் திட்டத்தையாவது நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், பொலன்னறுவை மாவட்டத்தின் அபிவிருத்திக்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 618 மில்லியனிற்கு மேலதிகமாக, இந்த விசேட சுற்றுலாத் திட்டத்திற்காக மாத்திரம் ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், இத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தின் தமன்கடுவ பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட அத்துமல்பிட்டிய மற்றும் முனியாண்டி கிராம அலுவலர் பிரிவுகளில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
குறிப்பாக, அத்துமல் வெவ குளத்தை அண்டிய பகுதிகளில்
- கயாக்கிங் (Kayaking) வசதிகள் மற்றும் பாரம்பரிய படகுச் சவாரிகள்
- வனவிலங்குகளைப் பார்வையிடுவதற்கான விசேட வசதிகள்
- பாரம்பரிய கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கிராமம் மற்றும் விற்பனைக்கூடங்கள்
- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உணவுகளை ருசிப்பதற்கான விசேட உணவகங்கள்
இந்தத் திட்டத்தின் ஊடாகப் பிரதேச மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைவதுடன், உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்குப் புதிய மதிப்பு சேர்க்கப்பட்டு, நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு அவசியமான வெளிநாட்டு செலாவணியை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த நிதி அமைச்சர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தனிப்பட்ட சொத்து அல்ல; அது மக்களின் வரிப்பணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும், ஆகையால் அரச அதிகாரிகளும் அரசியல் நிர்வாகமும் இணைந்து அந்த நிதியை திறம்படவும் வெளிப்படையாகவும் நிர்வகித்து, மக்களுக்கு அதிகபட்ச நன்மை கிடைக்கச் செய்ய வேண்டும் என இங்கு உரையாற்றிய அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வீடமைப்பு அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி. பி. சரத், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, பொலன்னறுவை மாநகர சபை மேயர் லலித் திஸ்ஸ குமார, பொலன்னறுவை பிரதேச சபைத் தலைவர் வசந்த குமார, தமன்கடுவ பிரதேச செயலாளர் இந்திக கருணாரத்ன, பிரதேச மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், தொழிலதிபர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பயனாளிகள், சமூக அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.




