– 187 லீ. சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் பிடிபட்டனர்
நாடு முழுவதும் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) மேற்கொண்ட அதிரடிச் சுற்றிவளைப்புகளில் பாரிய அளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக, கொழும்பு மற்றும் அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றையதினம் (18) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் ஐஸ், ஹெரோயின், போதை மாத்திரைகளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கிரிபத்கொடை, திப்பிட்டிகொட பகுதியில் நேற்றிர மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 31 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 6.096 கி.கி. ஐஸ் போதைப்பொருள், 2.070கி. கி. ஹெரோயின், 5,000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் ஹிரண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருக்கஹதொட்டுபல பகுதியில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 18 கி.கி. ஐஸ் போதைப்பொருள் மற்றும் டிஜிட்டல் தராசுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பாரிய பின்னணி ஒன்று அம்பலமாகியுள்ளது. குறித்த போதைப்பொருள் தொகையானது, தலைமறைவாகியுள்ள இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் வழிநடத்தலில் நாடு முழுவதும் விநியோகிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டமை தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபரை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை அநுராதபுரம், தஹையாகம சந்தியில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற 45 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 250 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 350 கிராம் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் மாலபே மற்றும் ராகம பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் சுமார் 187 லீற்றர் (250 போத்தல்கள்) கள்ள சாரத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதான சந்தேகநபரிடமிருந்து 75 லீற்றர் (100 போத்தல்), கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயது நபரிடமிருந்து 112 லீற்றர் (112 போத்தல்) கள்ளச் சாராயம் மீட்கப்பட்டுள்ளது.
சமூகத்தை சீரழிக்கும் இவ்வாறான கடத்தல்களை முறியடிக்கப் பொதுமக்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனப் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.




