தேசிய நேர்மைமிக்க வாரம் ஜூலை 27 முதல் 31ஆம் திகதி வரை

1 Min Read

நேர்மையான அரச சேவைக்கான “நேர்மைமிக்க கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா ” தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்காக, ஜூலை 27-31 வரையான காலப்பகுதி ‘நேர்மைமிக்க வாரம்’ என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை “கிளீன் ஸ்ரீலங்கா ” தேசிய திட்டத்துடன் இணைத்து செயல்படுத்துவதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, மேற்குறிப்பிட்ட வாரம் முதல் தொடர்ச்சியாக இந்த தேசிய செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

பிரஜைகளின் ஒழுக்கநெறிசார் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக, சமூகம் முழுவதும் உள்ள நேர்மையான கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட கிளீன் ஸ்ரீலங்காவை கட்டியெழுப்பும் பணி, இந்த தேசிய நேர்மைமிக்க வாரத்துடன் ஆரம்பமாகிறது.

முழுமையான அரச சேவையின் தரம், செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதும், ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதும் அரசாங்கத்தின் முதன்மையான இலட்சியமாக உள்ளதுடன், அந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்காக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

தனிப்பட்ட இலாபங்களைக் கருதாது, பொது மக்களின் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து, ஒழுக்கநெறிமிக்க விழுமியங்கள் மற்றும் கொள்கை ரீதியான தரநிலைகளுடன் ஒன்றிணைந்து, சுயக்கட்டுப்பாட்டுடன் கூடிய பிரியமான சேவையை வழங்கும் நேர்மையான அரச ஊழியரை உருவாக்குவதற்குத் தேவையான பின்னணியை உருவாக்குதே இதன் நோக்கமாகும்.

நேர்மையானதும் சட்டத்தை மதிக்கும் அரச சேவை, நேர்மையான டிஜிட்டல் அரச சேவை, மானிட கௌரவமிக்க நேர்மையான சமூகம், நேர்மையான வெளிப்படையான செயல்பாட்டு வலையமைப்பு, நேர்மையான நிலைபேறான பசுமை கலாசாரம் ஆகிய தொனிப்பொருள்களின் கீழ், இந்த வேலைத்திட்டம் நேர்மைமிக்க வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான PS/CSL/Circular/8/26 இலக்கச் சுற்றறிக்கையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *