லிந்துலை, அபரகந்த தோட்டப் பகுதியில் பாயும் ஆக்ரா ஆற்றில் மீன் தொட்டிக்கான கற்களைச் சேகரிக்கச் சென்ற போது நீரில் மூழ்கிக் காணாமல் போன 14 வயது மாணவனின் சடலம் இன்று (14) மதியம் மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா கோட்ட பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினரால் இந்தச் சடலம் ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீன் தொட்டிக்குக் கல் சேகரிக்கச் சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம் (10.32 a.m)
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை அபரகந்த தோட்டப் பகுதியில் பாயும் ஆக்ரா ஆற்றில், மீன் தொட்டிக்கு போடுவதற்காகக் கற்களைச் சேகரிக்கச் சென்ற மாணவர் ஒருவர் ஆற்றில் மூழ்கி நேற்று (13) காணாமல் போயுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காணாமல் போயுள்ளவர், அப்பகுதியில் உள்ள சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் 14 வயதான பரமானந்தன் கிசோக் என்ற மாணவராவார்.
நேற்று (13) பாடசாலை முடிந்த பின்னர், குறித்த மாணவன் மேலும் 9 பள்ளி நண்பர்களுடன் இணைந்து ஆக்ரா ஆற்றில் மீன் தொட்டிக்குள் போடுவதற்காகக் கற்களைச் சேகரிக்கச் சென்றுள்ளார்.
கற்களைச் சேகரித்துவிட்டு மாணவர்கள் ஆற்றில் இறங்கி நீராடிக் கொண்டிருந்த போது,குறித்த மாணவன் திடீரென ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளார்.
மாணவன் காணாமல் போனதை அடுத்து, லிந்துலை பொலிஸாரும், உள்ளூர் தோட்டத் தொழிலாளர்களும் இணைந்து நேற்று மாலை முதல் ஆற்றில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். எனினும், ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தமையால் நேற்றைய தேடுதல் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து, காணாமல் போன மாணவனைத் தேடிக் கண்டறியும் நோக்கில் பொலிஸ் உயிர் காக்கும் பிரிவு மற்றும் இலங்கை கடற்படையினரின் அவசர உதவி கோரப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




