அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மீண்டும் பரஸ்பர தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில ஈரானுடனான புரிந்துணர்வு உடன்படிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பதோடு, இந்த உடன்படிக்கை பயனற்றது என்று ஈரானும் கூறியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து ஈரானின் மீதான கடுமையான தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியதோடு பதிலடியாக பஹ்ரைன் மற்றும் குவைட்டில் இருக்கும் அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் நேற்று தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியது.
இந்நிலையில் அங்காராவில் நோட்டோ மாநாட்டில் பங்கேற்றிருக்கும் டிரம்ப், ஈரானுடனான உடன்படிக்கை முடிந்தவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஈரானுடனான போர் நிறுத்த உடன்படிக்கை மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கே இவ்வாறு பதில் அளித்திருந்தார்.
‘இது ஒரு சுவாரஸ்யாமான கேள்வி. என்னை பொறுத்தவரை அது (உடன்படிக்கை) முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். இனி அவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. அவர்கள் அருவருப்பானவர்கள். அவர்கள் நோயுற்ற மனநிலை கொண்டவர்கள். அவர்களை வழிநடத்துபவர்களும் அப்படிப்பட்டவர்களே. மேலும், அவர்கள் மிகவும் கொடூரமான, வன்முறையை நாடும் மனிதர்கள்.
எங்கள் பேச்சுவார்த்தைக் குழுவினருடன் நான் பேசுவேன். அவர்கள் பேச்சுவார்த்தையை நடத்த விரும்புகிறார்கள்;;. என்னைப் பொறுத்தவரை, அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது வெறும் நேர விரயம்தான். அவர்கள் பொய்யர்கள்’ என்றார்.
நான்கு மாதங்கள் நீடித்த போருக்கு பின்னரே அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கடந்த மாதம் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டது. எனினும் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் புதிய மோதல் இந்த உடன்படிக்கையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குவதாக உள்ளது. இதன்போது ஈரான் எண்ணெய் விற்பனைக்கான தடையை அமெரிக்கா மீண்டும் அமுலுக்குக் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை அமெரிக்கா அப்பட்டமாக மீறி இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் நடவடிக்கைகள், குறிப்பாக ஈரானின் எண்ணெய் விற்பனைக்கான அனுமதியை ரத்து செய்தது மற்றும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புதிய இராணுவத் தாக்குதல்கள் தற்போதுள்ள போர்நிறுத்த உடன்படிக்கையின் சில பகுதிகளை ‘செயலிழக்கச் செய்துள்ளன’ என்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் தனது ‘ஒருமைப்பாடு, தேசிய இறைமை மற்றும் தேசிய பாதுகாப்பை’ காப்பதற்கு தயங்கப்போதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், அமெரிக்க இராணுவத் தளங்களை வைத்திருக்கும் வளைகுடா நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அரக்சி, ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும், அதன் ‘மூலத்தையும் தாக்குதல் ஆரம்பித்த இடத்தையும்’ நேரடியாக குறிவைத்து பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
ஹோர்மூஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா ‘சக்திவாய்ந்த’ தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த நீரிணையில் இஸ்லாமிய புரட்சிக் காவல்படையின் 60க்கும் மேற்பட்ட சிறிய படகுகள் உட்பட 80க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் கடந்த செவ்வாயன்று தெரிவித்தது.
கெஷ்ம் தீவு, பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய இடங்கள் தாக்கப்பட்டதாகவும், அங்கு சிதறிய குண்டுத் துகள்களால் மக்கள் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. எனினும் குசஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற அமெரிக்க தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் இருவர் காயமடைந்ததாகவும் ஈரான் கூறியுள்ளது. அமெரிக்கா தாக்குதல்களைத் தொடங்குவதற்கு காரணமான, மூன்று டேங்கர்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை.
மறுபுறம் வளைகுடவில் இருக்கும் அமெரிக்காவின் 85 முக்கிய இராணுவ நிலைகளை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை தெரிவித்துள்ளது. குவைட் மற்றும் பஹ்ரைனில் சைரன் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
இரு பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 13 ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாக குவைட் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. குவைட்டில் மின்சார துண்டிப்பும் இடம்பெற்றிருப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பதற்றத்திற்கு மத்தியில் எண்ணெய் விலை வேகமாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக ஈரானுடனான போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வருவதாக டிரம்ப் கூறியதை அடுத்து விலை உயர ஆரம்பித்துள்ளது. டிரம்பின் அறிவிப்புக்கு முன்னர் பீப்பாய் ஒன்று 76 டொலர்களாக இருந்த மசகு எண்ணெய், அந்த அறிவிப்பை தொடர்ந்து 78 டொலர்களாக உயர்ந்தது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்து முதல் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி கமெனேயின் இறுதிச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கு வேளையிலேயே மோதல் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது, அவரது உடல் இன்று (09) நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில் நேற்று (19) ஈராக்கின் நஜாப் மற்றும் கர்பலா நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.




