– வெளிநாட்டுப் பயணத்தடை விதிப்பு
இழப்பீட்டுக்கான காரியாலயத்தின் அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அழுத்தம் கொடுத்து, முறைகேடான வழியில் ரூ. 8.85 மில்லியன் இழப்பீட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் கீழ், சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மேலதிகமாக, சேபாலிகா சமன் குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொட்டகம ஆகியோரே ஏனைய பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இக்குற்றப்பத்திரம், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவிந்திர பிரேமரத்ன முன்னிலையில் நேற்று (06) எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட 3 பிரதிவாதிகளும் தலா ரூ.1 மில்லியன் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் பிரதிவாதிகள் மூவரும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டதுடன், அவர்களது கடவுச்சீட்டுகளை முடக்கவும் உத்தரவிடப்பட்டது.
பிரதிவாதிகள் மூவரினதும் கைரேகைகளைப் பெற்று, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
அத்தோடு, இவ்வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 05ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




