ஹரியால – மொரகொல்ல பகுதியில் 72 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

2 Min Read

2014 ஆம் ஆண்டு ஹரியால – மொரகொல்ல பகுதியில் உள்ள உனகொல்ல தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவினால் இடம்பெயர்ந்து, கடந்த 12 ஆண்டுகளாகத் தமது நிரந்தர வீடுகள் கிடைக்காமல் தவித்த 72 குடும்பங்களுக்கு, தற்போதைய அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டின் மூலம் நிரந்தர வீட்டுத் தீர்வு கிடைக்கவுள்ளதாக தோட்டத் தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாகக் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இந்த வீட்டுத் திட்டம், தற்போதைய அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” (A rich country – a beautiful life) திட்டத்தின் கீழ், தோட்டத் தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் வழிகாட்டலில் உடனடியாகப் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

முன்பு காணப்பட்ட தொழில்நுட்ப பலவீனங்கள் மற்றும் பல்வேறு சிக்கல்களால், அத்திவாரத்துடன் நின்றிருந்த வீடுகளைச் சரியான முறையில் கட்டி முடிக்க முடியாமல் பயனாளிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தனர். இதனைச் சீர்செய்யும் வகையில் தற்போது 24 வீடுகள் கூரை மட்டம் வரை (இறுதி கட்டம்) கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்காக ரூ. 62.3 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பூர்த்தியாகாமல் இருக்கும் ஏனைய 30 வீடுகளைக் கட்டுவதற்கு ரூ. 60.7 மில்லியன் செலவில் கட்டுமானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வீட்டுத் திட்டத்தின் எஞ்சிய வேலைகளைக் காலம் தாழ்த்தாது துரிதமாக முடிப்பதற்கு, இலங்கை இராணுவத்தின் நேரடி உழைப்பைப் பெற்றுக்கொள்ளவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகளுக்குத் தேவையான மின்சார வசதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாக அவர்கள் எதிர்கொண்டு வந்த குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வாக, ரூ. 5.9 மில்லியன் செலவில் புதிய நீர் விநியோகத் திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பதுளை மாவட்டச் செயலகம் மற்றும் ஹரியால பிரதேச செயலகத்தின் நேரடி மேற்பார்வையில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தை, அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறையினரின் கூட்டு முயற்சியுடன் விரைவில் மக்களிடம் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஜூலை 4 ஆம் திகதி இந்த வீட்டுத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிடும் விசேட ஆய்வுக் கண்காணிப்புப் பயணம் நடைபெற்றது.

இதில் ஹரியால பிரதேச சபையின் தலைவர் பிரியந்த வருஷமான, தோட்டத் தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் மாவட்ட செயலாளர் குணதாச சமரசிங்க, சுனில் கலாகம மற்றும் பிரதேச செயலக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *