சட்டவாக்க செயன்முறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கை பாராளுமன்றத்திற்கும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் என்பவற்றுக்கிடையில் காணப்படும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாராளுமன்றத்தின் சார்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் சார்பில் இலங்கைக்கான பதில் வதிவிடப் பிரதிநிதி பன்ஷோ வென்ங்யலும் கைச்சாத்திட்டனர்.
இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கலாநிதி அலெக்ஸான்டர் சஷா பொடிரோஸா தலைமையிலான பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சட்டவாக்க செயன்முறை மேலும் வலுப்படுத்தப்படுவதுடன், பாராளுமன்றத்தின் நிறுவனத் திறனை மேம்படுத்தல் மற்றும் மக்கள் தொகை, சமூக அபிவிருத்தி தொடர்பான கொள்கை வகுப்பில் இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பு அடுத்த கட்ட மட்டத்திற்கு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், சனத்தொகை, பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள், பாலின சமத்துவம், பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் தீங்கிழைக்கும் சமூக நடைமுறைகள் தொடர்பில் ஆதாரபூர்வமான சட்டவாக்கத் தீர்மானங்களை எடுக்க தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல், அண்மைய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் மற்றும் சனத்தொகை ஆய்வுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு தகவல்களை பாராளுமன்றத்திற்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பினரும் இணைந்து செயற்படவுள்ளனர்.




