மறுசீரமைக்கப்பட்ட ‘Tell IGP’ இணையவழி சேவை நடைமுறை

1 Min Read

பொதுமக்கள் நேரடியாக பொலிஸ் மாஅதிபரிடம் (IGP) முறைப்பாடுகளை முன்வைக்கக் கூடிய ‘Tell IGP’ இணையவழி சேவையை 2026 ஆம் ஆண்டிற்காக மறுசீரமைத்து மீண்டும் நடைமுறைப் படுத்தியுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.

இந்த சேவையின் மூலம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் இலங்கையர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தங்களது முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல், போக்குவரத்து விதிமீறல்கள், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள், ஊழல் மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் நேரடியாக பொலிஸ் மாஅதிபரிடம் அனுப்பும் வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது.

கிடைக்கும் முறைப்பாடுகள் பிராந்திய அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு உடனடியாக அனுப்பப்படுவதுடன், விசாரணைக்காக பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

முறைப்பாட்டுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை என முறைப்பாட்டாளர் கருதினால், அதே விவகாரத்தை மீண்டும் பொலிஸ் மாஅதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வசதியும் இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ளது. இந்த சேவையை இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk, மூலம் இணைய இணைப்பான https://telligp.police.lk, அல்லது telligp@police.gov.lk என்ற மின்னஞ்சலை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும். மேலும், இச்சேவையை நாடளாவிய ரீதியில் திறம்பட நடைமுறைப்படுத்தும் நோக்கில், 48 பிராந்திய பொலிஸ் பிரிவுகளுக்கு கணினி இயக்குநர்கள் பயிற்சியளிக்கப்பட்டு நியமிக்கப் பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் பொலிஸ்மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதுடன், பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு விரைவான, வெளிப்படையான மற்றும் செயல்திறன் மிக்க பதிலளிப்பு முறையை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *