2026ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த நலவாழ்வு (Wellness Tourism) சுற்றுலா இலக்காக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக Book Retreats சர்வதேச அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் உலகளாவிய ரீதியில் சுற்றுலாப் பயணிகளின் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. இலங்கையின் பாரம்பரிய ஆயுர்வேத மரபு, குறைந்த செலவு மற்றும் சலுகை விலைகள், விசா வசதிகள் மற்றும் இயற்கை எழில் ஆகியவை நாட்டை உலகின் சிறந்த நலவாழ்வு சுற்றுலா இலக்காக மாற்றியுள்ளதாக Book Retreats அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. குறிப்பாக, நலவாழ்வு சுற்றுலாத் துறையின் மீதான உலகளாவிய ஆர்வம் ஆண்டுதோறும் 100 சதவீதம் என்ற அளவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டி வருவது, இலங்கை உலகின் கவனத்தை ஈர்க்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இலங்கை இந்த முதலிடத்தைப் பெற காரணமான முக்கிய அம்சங்களில், நாட்டின் மதிப்புமிக்க ஆயுர்வேத பாரம்பரியம், தீவின் தனித்துவமான இயற்கை ஈர்ப்புகள், முழுமையான நலவாழ்வு ஓய்வு விடுதிகளுக்கு (Comprehensive Retreats) காணப்படும் மலிவு கட்டணங்கள் என்பன குறிப்பிடத்தக்கவை.
உலகின் பல பகுதிகளில் நலவாழ்வு மையங்கள் இருந்தாலும், இலங்கையின் இந்த தனித்துவமான அம்சங்களே 2026 ஆம் ஆண்டின் உலகின் முதலிட நலவாழ்வு சுற்றுலா இலக்காக நாட்டை உயர்த்தியுள்ளன.
இந்த தரவரிசையில் அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும், மொரோக்கோ மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. மேலும், இங்கிலாந்து நான்காவது இடத்தையும், ஸ்பெயின் ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளது.
அதேவேளை, நேபாளம், தாய்லாந்து, மெக்சிகோ, கோஸ்டாரிகா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் சிறந்த நலவாழ்வு சுற்றுலா இலக்குகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.




