கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அதிநவீன ‘கேத் லேப்’ உள்ளிட்ட மருத்துவ வசதிகள்

1 Min Read

நாட்டின் சுகாதாரச் சேவைகளை மேம்படுத்தும் வகையில், களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அதிநவீன இதய ஆய்வகம் (Cath-Lab) உள்ளிட்ட மருத்துவப் பிரிவுகள் நாளை 30ஆம் திகதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளன.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் வழிகாட்டலின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நீண்டகாலத் தேவையை நிறைவு செய்யும் வகையில், தென் கொழும்பு போதனா மருத்துவமனையில் பின்வரும் அதிநவீன சிகிச்சை அலகுகள் நிறுவப்பட்டுள்ளன. அதாவது, இதய வடிகுழாய் ஆய்வுக்கூடம் (Cardiac Catheterization Laboratory / Cath Lab), இரத்த நாளப் பரிசோதனை வசதி, சிறுநீரகக் கற்களை அதிர்வலைகள் மூலம் உடைத்து அகற்றும் பிரத்தியேகப் பிரிவு ஆகியன திறந்து வைக்கப்படவுள்ளன.

இலங்கையின் இதய நோய் சிகிச்சைத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்த ஒரே வாரத்தில் நாட்டின் அரச மருத்துவமனை கட்டமைப்பில் 4 அதிநவீன கேத் லேப் அலகுகள் இணைக்கப்படவுள்ளன.

இதன் ஒரு கட்டமாக, யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் அமைக்கப்பட்ட புதிய ஆய்வகம் கடந்த 27ஆம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, களுபோவில மருத்துவமனையின் புதிய பிரிவு மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் மேலும் 2 புதிய கேத் லேப்களை இந்த வாரத்திற்குள் நோயாளிகளின் சிகிச்சைக்காகச் இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

புதிதாக நிறுவப்படும் இந்த அதிநவீன அமைப்புகள், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான நிகழ்நேரப் படமெடுக்கும் (Real-time imaging) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இவை பரிசோதனைகளின் போது நோயாளிகளுக்கு ஏற்படும் கதிர்வீச்சின் (Radiation) அளவைக் கணிசமாகக் குறைப்பதுடன், மருத்துவர்கள் துல்லியமாகச் சிகிச்சையளிக்கத் தேவையான உயர்தரப் படங்களையும் வழங்குகின்றன.

இந்த நவீன மேம்பாடுகள் மூலம், அரச மருத்துவமனைகளை நாடிவரும் நோயாளிகளுக்கு மிகவும் வசதியான, வேகமான, துல்லியமான மற்றும் திறமையான மருத்துவச் சேவைகளை இலவசமாக வழங்க வழிவகுக்கும் எனச் சுகாதார அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *