ஸ்பெயினை சமன் செய்து அதிர்ச்சி கொடுத்தது குட்டி தீவு கேப் வெர்டே

2 Min Read

முதல் முறை பிஃபா உலகக் கிண்ணத்தில் கலந்து கொள்ளும் குட்டி தீவு நாடான கேப் வெர்டே, ஐரோப்பிய சம்பியனான ஸ்பெயினுக்கு எதிரான முதல் போட்டியை கோலின்றி சமன் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. கேப் வெர்டே அணியின் 40 வயதாகும் கோல் காப்பாளர் வோசின்ஹா அசைக்க முடியாத சுவராக இருந்து கோல் முயற்சிகளை முறியடித்தார்.

எச் குழுவுக்காக அட்லான்டாவில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி முழுமையாக அதிக்கம் செலுத்தியதோடு போட்டியின் 75 வீதமான நேரத்தில் ஸ்பெயின் வீரர்களிடமே பந்து சுழன்றது. எனினும் கேப் வெர்டே அணியின் தற்காப்பு ஆட்டம் மற்றும் கோல் காப்பளரின் அபார செயற்பாட்டினால், ஸ்பெயினின் கோல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

போட்டி முழுவதும் ஸ்பெயின் 27 கோல் முயற்சிகளை செய்ததோடு அதில் ஏழு கோல் வாய்ப்புகளை வோசின்ஹா தடுத்தமை குறிப்பிடத்தக்கது. மறுபுறம் பெறும் சர்ச்சைகளுக்கு பின்னர் அமெரிக்கா சென்று தனது முதல் உலகக் கிண்ணப் போட்டியில் ஆடிய ஈரான், நியூசிலாந்துக்கு எதிரான அந்த ஆட்டத்தை 2–2 என்ற கோல் கணக்கில் சமன் செய்துள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸின் இலங்கை நேரப்படி நேற்று (16) காலை நடைபெற்ற ஜி குழுவுக்கான இந்தப் போட்டியில் இரு அணிகளும் முதல் பாதியில் 1–1 என சமநிலை பெற்றதோடு எலிஜா ஜஸ்ட் நியூசிலாந்து சார்பில் பெற்ற இரட்டை கோல் அந்த அணி போட்டியை சமன் செய்ய உதவியது. ஈரான் அணி மெக்சிகோவில் முகாம் இட்டே அமெரிக்காவில் நடைபெறும் தனது குழு நிலை போட்டிகளில் ஆடுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஜி குழுவுக்காக நேற்று நடந்த பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் 1–1 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலை பெற்றது. எமாம் அஷுர் 20 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் மூலம் எகிப்து அணி முன்னிலை பெற்ற நிலையில் 60 ஆவது நிமிடத்தில் முஹமது ஹினியின் ஓன் கோல் பெல்ஜியம் அணி போட்டியை சமன் செய்ய உதவியது. எகிப்து அணி 92 ஆண்டுகளில் தனது முதலாவது உலகக் கிண்ண வெற்றியை பெற போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற சவூதி அரேபியா மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையிலான எச் குழுவுக்கான ஆட்டமும் 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றது. முதல் பாதியில் 1–0 என சவூதி முன்னிலை பெற்றபோதும் 80 ஆவது நிமிடத்தில் மெக்சிமிலியானோ கோல் புகுத்தி போட்டியை சமன் செய்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *