வெளிநாட்டுக்கு அனுப்புவதாக மோசடி

1 Min Read

– ஏமாந்தோர் முறைப்பாடு செய்யுமாறு பணியகம் கோரிக்கை

சுற்றுலா வீசாக்களை பயன்படுத்தி இலங்கையர்களை துபாய் மற்றும் மோல்டோவா நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த ‘துபாய் சுத்தா’ என அழைக்கப்படும் ரன்தெட்டிகே நிஸங்க பிரியதர்ஷன எனும் சந்தேகநபர், நேற்று (01) கடுவலைப் பகுதியில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) விசேட புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

கிரிஉல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குத் துபாயில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 7 இலட்சம் பெற்றுக்கொண்டு, வாக்குறுதியளித்தபடி வேலை பெற்றுக்கொடுக்காமல் ஏமாற்றியதாகப் பணியகத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் கடுவலைப் பகுதியில் தங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் அதிகாரிகள் அங்கு சென்றபோது, அவர் தனது காரில் தப்பியோட முயற்சித்துள்ளார். எனினும், அதிகாரிகள் அவரை பின்தொடர்ந்து சென்று பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புளத்சிங்கள பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியைப் (UNP) பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உறுப்பினர் என்பதுடன், அவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இந்த மோசடி வலைப்பின்னலை மெகா அளவில் முன்னெடுத்து வந்துள்ளார்.

இவர் இதற்கு முன்னரும் இவ்வாறான மனிதக் கடத்தல் மற்றும் மோசடி குற்றங்களுக்காகப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர் இன்று குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முறையான அனுமதிப்பத்திரம் இன்றி ஆட்களைச் சேர்ப்பது சட்டவிரோதமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நபரிடமோ அல்லது இவரது குழுவினரிடமோ பணம் கொடுத்து ஏமாற்றமடைந்தவர்கள் எவராவது இருப்பின், உடனடியாகப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் 0112882229 எனும் இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *