பதுளையில் ரூ. 100 முதலீட்டில் 50 அபிவிருத்தி திட்டங்கள்

1 Min Read

வறுமை ஒழிப்பு தேசிய திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் பிரஜா சக்தி “1000 கிராமங்கள் – 1000 பணிகள்” தேசிய திட்டத்தின் கீழ், பதுளை மாவட்டத்தில் ரூ. 100.872 கோடி (ரூ. 1,008,720,000) பெருந்தொகை முதலீட்டில் 50 விசேட அபிவிருத்தித் திட்டங்கள் இன்று (02) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இதன் முதன்மை நிகழ்வாக, பதுளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹின்னாரங்கொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் விசேட அபிவிருத்தித் திட்டம் இன்று உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் ஹின்னாரங்கொல்ல பிரிவின் முத்துமால 12 ஆம் கட்டை சந்தியிலிருந்து சப்புகஹகும்புர வரை செல்லும் 8 அடி அகலமுடைய விவசாய வீதியானது ரூ. 15 இலட்சம் செலவில் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

பன்முகப்படுத்தப்பட்ட வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை நல்வழியாக்குதல் போன்ற பணிகள் நேரடியாக மேற்கொள்ளப்படும்.

இந்த தேசிய திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 50 அபிவிருத்தித் திட்டங்கள் இன்று ஒரே நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 1008.72 மில்லியனாகும்.

மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் இன்று நடைபெற்ற இந்த ஆரம்ப விழாவில், பதுளை மாநகர சபை முதல்வர் நந்தன ஹப்புகொட, பதுளை பிரதேச சபையின் தலைவர் பாலித ஜயவர்தன, பதுளை மாவட்ட செயலாளர் சுனில் கலகம மற்றும் பதுளை பிரதேச செயலாளர் துஷாரி அனுராதா உள்ளிட்ட அரச அதிகாரிகளும், அப்பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான பயனாளிகளும் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *