ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி உடன்படிக்கை ஒன்றுக்கான இறுதிக் கட்ட முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் ஈரானிய ஏவுகணை தளங்கள் மற்றும் கண்ணி வெடிகளை வைக்க முயன்றதாகக் கூறி படகுகள் மீது அமெரிக்கா புதிய வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
‘ஈரானிய படைகளின் அச்சுறுத்தலில் இருந்து எமது துருப்புகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக’ தற்பாதுகாப்புக்காகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் குறிப்பிட்டுள்ளது.
‘இரு நாடுகளுக்கிடையிலான தற்போதைய போர்நிறுத்தத்தின் போது, அமெரிக்க இராணுவம் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டபடியே எங்கள் படைகளை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது’ என்று அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகத்தின் பேச்சாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு ஈரான் உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை. என்றபோதும் ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மைல் பகாய் முன்னதான வெளியிட்ட அறிவிப்பில், ‘போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் எட்டப்பட்டபோதும் ஒப்பந்தம் ஒன்று விரைவில் எட்டப்படும் நிலையில் இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்போது இடம்பெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தத் தாக்குதல் எவ்வாறான பாதிப்பை செலுத்தும் என்பது உடன் உறுதி செய்யப்படவில்லை.
இந்தத் தாக்குதலுக்கு பின்னர் கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ, உடன்படிக்கை ஒன்று இன்னுமே சாத்தியமாக இருப்பதாக குறிப்பிட்டார். ‘நாம் முன்னேற்றம் காண முடியுமா என்பதைப் பார்ப்போம். ஆரம்ப ஆவணத்தில் உள்ள குறிப்பிட்ட சொற்கள் மற்றும் வார்த்தைப் பயன்பாடுகள் குறித்து இருதரப்பிலும் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்று நான் நினைக்கிறேன். அதனால் இதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும்’ என்று இந்தியா விஜயம் மேற்கொண்டுள்ள ருபியோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மறுபுறம் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, பாராளுமன்ற சபாநாயகர் முஹமது பகர் கலிபப் மற்றும் மத்;திய வங்கி ஆளுநர் அப்துல்நாசர் ஹெப்பதி ஆகியோர் உடன்படிக்கை ஒன்று பற்றி கட்டார் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அங்கு சென்றிருக்கும் நேரத்திலேயே அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
நியூயோர்க் டைம்ஸ் இதழின்படி, டிம் ஹாக்கின்ஸ் கூறுகையில், ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள ஈரானிய கடற்படைத் தளம் ஒன்றைக் கொண்டுள்ள, தெற்குத் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸுக்கு அருகிலுள்ள ஒரு பகுதியையே இந்தத் தாக்குதல்கள் குறிவைத்ததாகத் தெரிவித்தார்.
பந்தர் அப்பாஸில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக ஈரானிய அரச ஊடகங்கள் முன்னதாகத் தெரிவித்தன. இந்நிலையில் ஈரானிய வான்பகுதிக்குள் நுழைந்த அமெரிக்க ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரானின இஸ்லாமிய புரட்சிக் காவல் படை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட நீண்ட பதிவில், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும், ஆனால் அது தோற்றால் புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்திருந்தார். ‘அது அனைவருக்கும் சிறந்த ஒப்பந்தமாக இருக்க வேண்டும்; இல்லையெனில் எந்த ஒப்பந்தமும் இருக்காது.’ என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிக்கு மத்தியில் இஸ்ரேல் உடன் சுமுக உறவை ஏற்படுத்த அபிரஹாம் ஒப்பந்த்தில் இணைவதற்கு சவூதி அரேபியா, கட்டார், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து மற்றும் ஜோர்தானுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் இந்த அழைப்பை நிராகரித்ததோடு மற்ற நாடுகள் இதற்கு உடன் எந்த பதிலையும் அளிக்கவில்லை. காசாவில் இஸ்ரேல் நடத்திய பாரிய நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த முஸ்லிம் நாடுகள் இவ்வாறான உடன்படிக்கை ஒன்றுக்கு தயக்கம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ‘அனைத்து நாடுகளும் உடனடியாக அபிரஹாம் ஒப்பந்த்தில்; கையெழுத்திட வேண்டும் என்று கட்டாயமாக கேட்டுக் கொள்கிறேன். மேலும், அமெரிக்காவின் ஜனாதிபதியாக நான் கூறுவது என்னவெனில், ஈரான் என்னுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அவர்களையும் இந்த ஒப்பற்ற உலக கூட்டணியின் ஒரு பகுதியாகக் காண்பது எனக்கு பெருமையாக இருக்கும்’ என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
எனினும் பிராந்தியத்தில் போர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த திங்களன்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான விரைவில் லெபனானின் கிழக்கு பகா பள்ளத்தாக்கு மற்றும் ஏனைய பகுதிகளில் ஹிஸ்புல்லா உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.
கடந்த ஏப்ரல் நடுப்பகுதியில் இஸ்ரேல் மற்றும் லெபனான் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை செய்தபோதும், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தற்பாதுகாப்பு நடவடிக்கை எனக் கூறி லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
தெற்கு லெபனானின் மஷ்கரா நகரில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலை அடுத்து மீட்புப் பணியாளர்கள் 12 உடல்களை மீட்டதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் கணிசமானவர்கள் காயமடைந்திருப்பதாக சுகாதார நிர்வாகம் தெரிவித்துள்ளது.



