அமைதி திட்டம்: அமெரிக்காவின் புதிய பதிலை ஈரான் பரிசீலனை

4 Min Read

போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டை பரிசீலித்து வருவதாக ஈரான் நேற்று (21) அறிவித்துள்ளது. ஈரானிடம் இருந்து சரியான பதில் கிடைக்கும் வரையில் ஒருசில நாட்கள் காத்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டதோடு, ஆனால் ஈரான் உடன்படிக்கை ஒன்றுக்கு இணங்காத பட்சத்தில் புதிய தாக்குதல் ஒன்றை நடத்துவது தொடர்பிலும் அவர் எச்சரித்த நிலையிலேயே ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

‘அமெரிக்காவின் நிலைப்பாடு எம்மிடம் கிடைத்திருப்பதோடு நாம் அதனை பரிசீலனை செய்து வருகிறோம்’ என்று ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மைல் பகாயியை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அரச செய்தி நிறுவனமான ‘நூர்’ குறிப்பிட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட அமைதித் திட்டம் தொடர்பில் மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் ஊடாக அமெரிக்கா மற்றும் ஈரான் செய்திகளை பரிமாறிக்கொண்டிருப்பதாக ‘நூர்’ செய்தி நிறுவனம் கூறியது. ‘ஈரானின் 14 அம்ச முன்மொழிவின் அடிப்படையில் பல தடவைகள் செய்திகள் பரிமாறப்பட்டன’ என்று பகாயி குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சன் நக்வி ஈரானுக்கு பயணமாகி இருக்கும் நிலையிலேயே பகாயி இதனைத் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த மாதம் அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்திய பாகிஸ்தான் தொடர்ந்து தனது மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

பலவீனமான போர் நிறுத்தம் ஒன்று ஆறு வாரமாக நீடித்தபோதும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முன்னேற்றம் இன்றி ஸ்தம்பித்துள்ளது. எனினும் சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள எண்ணெய் விலை, பணவீக்கம் மற்றும் சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் கவலைகள் அதிகரித்துள்ளன. எதிர்வரும் நவம்பரில் அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெறவுள்ளதால் டிரம்புக்கு உள்நாட்டிலும் இந்தப் போர் அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

‘என்னை நம்புங்கள், எமக்கு சரியான பதில்கள் கிடைக்காவிட்டால், விடயங்கள் மிகவும் வேகமாக நகரும். நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம்’ என்று டிரம்ப் கடந்த புதனன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எத்தனை காலம் காத்திருப்பீர்கள் என்று கேட்டதற்கு, ‘அது சில நாட்களாக இருக்கக் கூடும், ஆனால் அது மிக விரைவானதாக இருக்கும்’ என்று டிரம்ப் பதில் அளித்தார்.

முன்னதாக ஈரான் புரட்சிக் காவல் படை விடுத்த எச்சரிக்கையில், ‘ஈரான் மீதான தாக்குதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால், பிராந்தியப் போர் இம்முறை பிராந்தியத்தையும் தாண்டி விரிவுபடுத்தப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

‘எமது பக்கம் இராஜதந்திர தீர்வுகளுக்கான அனைத்து வழிகளும் தொடர்ந்தும் திறந்தே உள்ளன’ என்று குறிப்பிட்ட ஈரான் ஜனாதிபதி மசூத் பசஷ்கியான், அழுத்தம் மூலம் ஈரானை சரணடையச் செய்வது வெறும் மாயை மட்டுமே என்று எச்சரித்தார்.

ஈரான் தனது புதிய முன்மொழிவை இந்த வாரம் அமெரிக்காவுக்கு வழங்கி இருந்தது. டிரம்ப் நிராகரித்த ஈரானின் முந்தைய முன்மொழிவின் பல அம்சங்களும் தற்போதைய முன்மொழிவில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அது தொடர்பில் தெரிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்;டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துவது, போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது, தடைகளை தளர்த்துவது, முடக்கப்பட்டிருக்கும் சொத்துகளை விடுவிப்பது மற்றும் பிராந்தியத்தில் இருந்து அமெரிக்க துருப்புகள் வாபஸ் பெறுவது போன்ற நிபந்தனைகளை ஈரான் மீண்டும் விதித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதில் சர்வதேச எண்ணெய் விநியோகத்தின் முக்கிய கடல்வழி பாதையாக இருக்கும் குறுகலான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தொடர்ந்து முடக்கியுள்ளது. அந்த நீரிணை வழியாக தமது ஒருங்கிணைப்புடன் கடந்த 24 மணி நேரத்தில் 26 கப்பல்கள் பயணித்ததாக ஈரான் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை தெரிவித்துள்ளது. ‘புரட்சிக்காவல் கடற்படையின் ஒப்புதல் மற்றும் ஒருங்கிணைப்புடன் ஹோர்முஸ் நீரிணை ஊடாக போக்குவரத்துகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன’ என்று அந்தப் படை கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானின் ‘பாரசீக வளைகுடா நீரிணை அதிகாரசபை’ தனது எக்ஸ் தளத்தில், ஹோர்முஸ் நீரிணையின் புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அதில், தங்களின் அனுமதி இல்லாமல் கப்பல்கள் கடந்து செல்ல முடியாது கட்டுப்படுத்தப்பட்ட கடல் பகுதி குறித்துக் காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது போர் தொடுப்பதற்கு முன்னர் ஹோர்முஸ் நீரிணை ஊடாக 20 வீதமான சர்வதேச எண்ணெய் விநியோகம் இடம்பெற்று வந்தது. எனினும் இந்தப் போரை அடுத்தே ஈரான் அந்த நீரிணையை முடக்கியது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. லெபனான் உட்பட பிராந்தியத்தின் அனைத்து முனைகளிலும் மோதலை நிறுத்த வேண்டும் என்பது ஈரானின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக உள்ளது.

எனினும் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டபோதும் அதனை மீறி தெற்கு லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து சரமாரித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *