13 ஆவது வர்த்தக சங்க கரப்பந்தாட்டத் தொடர் 2026 விண்ணப்பம் கோரல்

2 Min Read

இலங்கை வர்த்தக சங்க கரப்பந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்யும் 13 ஆவது வர்த்தக சங்க கரப்பந்தாட்டத் தொடர் (Mercantile Volleyball Tournament 2026) இவ்வருடம் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இருந்து 100 இற்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இப்போட்டித் தொடரின் ஆரம்பகட்டப் போட்டிகள் ஆகஸ்ட் மாதத்திலும், இறுதிப் போட்டிகள் செப்டம்பர் மாதத்திலும் வென்னப்புவவில் உள்ள ஸ்ரீ அல்பர்ட் எப். பீரிஸ் விளையாட்டு வளாகத்தில் (Sir Albert F. Peiris Sports Complex) நடைபெறவுள்ளன. 2012 ஆம் ஆண்டு இப்போட்டித் தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நடத்தப்படும் 13 ஆவது பதிப்பு இதுவாகும். வர்த்தகத் துறையினரிடையே கரப்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிப்பதும், நிறுவனங்களுக்கு இடையே நல்லுறவை வளர்ப்பதுமே இதன் முக்கிய நோக்கமாகும்.

இப்போட்டித் தொடரானது சூப்பர் லீக் (Super League), சாம்பியன்ஷிப் (Championship), ‘ஏ’ பிரிவு (Division ‘A’) மற்றும் 17 முதல் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கான இளையோர் பிரிவு (Youth Category) எனப் பல பிரிவுகளின் கீழ் நடத்தப்படவுள்ளது.

தேசிய விதிமுறைகளுக்கு அமைய நடத்தப்படும் இப்போட்டித் தொடரில், 2026 ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் தத்தமது நிறுவனங்களில் பணியில் இணைந்த ஊழியர்கள் மட்டுமே பங்கேற்க தகுதி உடையவர்களாவர். ஶ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் பொது முகாமையாளர் திலக் திலகரத்ன தலைவராகக் கொண்டுள்ள சங்கத்தின் செயற்குழுவின் வழிகாட்டலின் கீழ் இத்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தொடரில் வெற்றிபெறும் அணிகளுக்காக ரூ. 1 மில்லியனுக்கும் (10 இலட்சம்) அதிக ரொக்கப் பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் சிறந்த வீரர், சிறந்த செட்டர், சிறந்த ஸ்பைக்கர், சிறந்த லிபெரோ ஆகிய தனிநபர் விருதுகளும், சிறந்த பயிற்சியாளர் மற்றும் அதிஷ்டசாலி அணிக்கான விசேட விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

இப்போட்டித் தொடரில் பங்கேற்க விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களை www.mva.lk என்ற இணையத்தள முகவரியூடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *