LPL 2026 போட்டி அட்டவணை வெளியீடு: ஜூலை 17 இல் யாழ் – காலி மோதலுடன் ஆரம்பம்!

1 Min Read

லங்கா பிரீமியர் லீக் (LPL) 2026 தொடருக்கான உத்தியோகபூர்வ போட்டி அட்டவணையை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் (SLC) வெளியிட்டுள்ளது.

இதன்படி, இம்முறை எல்.பி.எல் தொடரானது ஜூலை 17 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 08ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், ஆகஸ்ட் 09ஆம் திகதி மேலதிக நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 17ஆம் திகதி எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் ஆரம்ப விழாவுடன் தொடர் ஆரம்பமாகவுள்ளதுடன், முதலாவது தொடக்கப் போட்டியில் யாழ்ப்பாணம் மற்றும் காலி அணிகள் மோதவுள்ளன.

லீக் சுற்றுப் போட்டிகள் எஸ்.எஸ்.சி (SSC), தம்புள்ளை மற்றும் கண்டி ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளதுடன், இறுதிச் சுற்று (Playoffs) போட்டிகள் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு (RPICS) மாற்றப்படவுள்ளன.

லீக் சுற்றில் மொத்தம் 20 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், வார இறுதி நாட்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலை நாட்களில் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் (Double-headers) வீதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இறுதிச் சுற்று (Playoff) போட்டிகள் ஆகஸ்ட் 05 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. அன்றைய தினம் முதலாவது தகுதிச் சுற்று (Qualifier 1 – முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இடையில்) மற்றும் வெளியேற்றுச் சுற்று (Eliminator – 3 மற்றும் 4 ஆம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இடையில்) போட்டிகள் நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 07ஆம் திகதி இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியும் (Qualifier 2), ஆகஸ்ட் 08ஆம் திகதி ஆர். பிரேமதாச மைதானத்தில் பிரம்மாண்ட இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *