பிரித்தானியாவின் கூட்டாளர் நாடுகளான வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியபோது, பிரித்தானியா உடனடியாக உதவிக்கு வரவில்லை என அந்நாடுகள் கோபம் கொண்டுள்ளன.
பிரித்தானியா மீது வளைகுடா நாடுகள் கோபம்
பல்வேறு வளைகுடா நாடுகளிலும், சைப்ரஸ் தீவிலும், பிரித்தானியர்களும் பிரித்தானிய ராணுவ தளங்களும் இருக்கும் நிலையில், அவற்றின்மீது ஈரான் தாக்குதல் நடத்தியபோது உடனடியாக பிரித்தானியா உதவிக்கு வரவில்லை என கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

குறிப்பாக, பிரித்தானியாவின் இரண்டு ராணுவ தளங்கள் இருக்கும் சைப்ரஸ் மீதான தாக்குதல் தொடர்பில் பிரித்தானியா நடந்துகொண்ட விதம் குறித்து பஹ்ரைனும் ஐக்கிய அரபு அமீரகமும் கேள்வி எழுப்பியுள்ளன.
அத்துடன், பிரித்தானியாவின் ராணுவ தளங்களைப் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்காவுக்கு அனுமதி அளிக்க பிரித்தானியா தாமதம் செய்ததும் அதன் வளைகுடா கூட்டாளர்களை விரக்தியடையச் செய்துள்ளது.
பிரித்தானியாவின் ராணுவ தளங்களைப் பயன்படுத்திக்கொள்ள பிறகு அமெரிக்காவுக்கு பிரித்தானிய பிரதமர் அனுமதி அளித்தார் என்றாலும், இப்படி ஒரு நெருக்கடியான நேரத்தில் ஸ்டார்மர் உடனடியாக அனுமதியளிக்காததை, பிரித்தானியா விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை என்னும் ரீதியில் வளைகுடா நாடுகள் பார்க்கின்றன.

அத்துடன், பிரித்தானியாவிலிருந்து போர்க்கப்பலான HMS Dragon அடுத்த வாரம்தான் சைப்ரஸ் தீவுக்கு புறப்பட உள்ளது.
ஆக, ஒரு பிரச்சினை என்றால், பிரான்ஸ் நாடு ஓடி வருகிறது, பிரித்தானியா ஏன் வரவில்லை என்கிறார் பிரித்தானியாவுக்கான சைப்ரஸ் தீவின் உயர் ஆணையரான Kyriacos Kouros.

பிரித்தானியாவின் ராணுவ தளங்களை பயன்படுத்திக்கொள்ளும் அமெரிக்காவின் கோரிக்கை ஸ்டார்மர் உடனடியாக பதிலளிக்காததால், ஸ்டார்மர் ஒன்றும் வின்ஸ்டன் சர்ச்சில் இல்லை’ என விமர்சித்திருந்தார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.
விடயம் என்னவென்றால், இப்படிப்பட்ட விடயங்களில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தானாக எந்த முடிவும் எடுக்கமுடியாது.
பிரித்தானியாவின் தரப்பிலிருந்து பார்த்தால், ஒரு ஜனநாயக நாடு எப்படி முடிவெடுக்குமோ அப்படித்தான் அவர் முடிவெடுத்தார்.
கேபினட்டைக் கூட்டி, அமைச்சர்களின் ஆலோசனையைக் கேட்டு, அதில் சில அமைச்சர்கள் பிரித்தானிய ராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்வதற்கு ஆட்சேபனை தெரிவித்ததால்தான் அவர் அமெரிக்காவுக்கு அனுமதியளிக்க தாமதம் ஆனது.
ட்ரம்பைப் போல, எடுத்தோம் கவிழ்த்தோம் என ஸ்டார்மரால் முடிவெடுக்க முடியாது.

ட்ரம்ப் ஈரானைத் தாக்க அவசரப்பட்டு எடுத்த முடிவே தவறானது என அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் முன்வைத்துள்ள நிலையில், அதே தவறை ஸ்டார்மரும் செய்ய முடியாது.
உக்ரைன் போரில் உதவ அழைப்பு விடுக்கப்பட்டபோது, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, என் படைவீரர்களை உக்ரைனுக்கு சாக அனுப்பமுடியாது என துணிச்சலாக பதிலளித்தது நினைவிருக்கலாம்.
ஆக, தேவையில்லாமல் போரில் ஏன் தலையிடவேண்டும் என பிரித்தானியா நினைப்பதையும் குறை சொல்ல முடியாது.
என்றாலும், லட்சக்கணக்கான பிரித்தானியர்கள் வளைகுடா நாடுகளில் வாழும் நிலையில், அந்நாடுகளுக்கு ஒரு பிரச்சினை என்றதும் உடனடியாக உதவ பிரித்தானியா ஏன் ஓடிவரவில்லை என்கின்றன வளைகுடா நாடுகள்!



