தென் அமெரிக்க நாடான பெருவில் முக்கியமான உள்கட்டமைப்பின் மீதான கட்டுப்பாட்டை சீனா உறுதிப்படுத்திய நிலையில், அந்த நாடு சீனாவிடம் இறையாண்மையை இழப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.
சக்தியற்றதாகிவிடும்
சீனாவால் கட்டப்பட்ட மிகப் பெரிய துறைமுகத்தின் உள்ளூர் கட்டுப்பாட்டாளரின் மேற்பார்வையை பெருவின் நீதிமன்றத் தீர்ப்பு கட்டுப்படுத்தியதை அடுத்தே ட்ரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

பெருவின் தலைநகர் லிமாவின் வடக்கே உள்ள சான்கேயில் 1.3 பில்லியன் டொலர் ஆழ்கடல் துறைமுகம், லத்தீன் அமெரிக்காவில் சீனாவின் காலடி எடுத்து வைக்கும் அடையாளமாக மாறியுள்ளது.
இது அமெரிக்காவையும் தூங்க விடாமல் செய்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க வெளிவிவகாரத்துறை சமூக ஊடகத்தில் பதிவிடுகையில், கொள்ளையடிக்கும் சீன உரிமையாளர்களின் அதிகார வரம்பிற்குள் இருக்கும், பெருவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான சான்கேயை மேற்பார்வையிட அந்த நாடு சக்தியற்றதாகிவிடும் என்ற சமீபத்திய தகவல்கள் கவலையளிப்பதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மேலும், பெருவின் சொந்தப் பிரதேசத்தில் முக்கியமான உள்கட்டமைப்பை மேற்பார்வையிடும் இறையாண்மை உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம். இது பிராந்தியத்திற்கும் உலகிற்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்: மலிவான சீனப் பணம் இறையாண்மையை விலையாகக் கேட்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தென் அமெரிக்க நாடுகளில் சீனா பெரும் முதலீடுகளை முன்னெடுத்தும், அதிக அளவிலான வர்த்தகங்களை ஏற்படுத்திக்கொண்டும் ஆதிக்கம் செலுத்தி வருவதே ட்ரம்ப் நிர்வாகத்தின் கலக்கத்திற்கு காரணம்.
பசிபிக் கடற்கரையோரத்தில் உள்ள சான்காய் துறைமுகம், சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் ஒரு பகுதியாகும், இது ஒரு உள்கட்டமைப்பு திட்டமாகும்.
சீன அரசுக்கு சொந்தமான வங்கிகள் பல கண்டங்களில் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பிற திட்டங்களைக் கட்டுவதற்கு கணிசமான கடன்கள் அல்லது நிதி உத்தரவாதங்களை வழங்குகின்றன.
லத்தீன் அமெரிக்காவின் ஆழமான துறைமுகமான சான்கே ஆசியாவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையில் பயணிக்கும் உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களில் சிலவற்றை நிறுத்தும் திறன் கொண்டது.
விதிமுறைகளுக்கும் உட்பட்டு
சீனா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பெருவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில், சான்கே துறைமுகத்தின் கட்டுமானத்தில் பெரும்பகுதி முதலீடு செய்துள்ள Cosco நிறுவனம், ட்ரம்ப் நிர்வாகத்தின் குற்றச்சாட்டுகளை மொத்தமாக நிராகரித்துள்ளது.
மேலும், நீதிமன்றத் தீர்ப்பு எந்த வகையிலும் இறையாண்மையின் அம்சங்களை உள்ளடக்கியதல்ல என்றும், பெருவியன் அதிகாரிகளின் அதிகார வரம்பு, இறையாண்மை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ், அனைத்து பெருவியன் விதிமுறைகளுக்கும் உட்பட்டு துறைமுகம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதை Cosco சுட்டிக்காட்டியுள்ளது.

மட்டுமின்றி, ஏராளமான பெருவியன் அதிகாரிகள் துறைமுகத்தின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்தனர். அவர்களில் காவல்துறையினர், சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சுங்க அதிகாரிகளும் அடங்குவர் என தெரிவித்துள்ளது.
ஆனால், ஜனவரி 29 அன்று கீழ் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், பெருவியன் அதிகாரிகளுக்கு சான்கேயில் உள்ள துறைமுகத்தின் மீது ஒழுங்குமுறை, மேற்பார்வை, கண்காணிப்பு மற்றும் தடை அதிகாரங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




