நோர்வேயின் பட்டத்து இளவரசி எப்ஸ்டீனுடன் பல வருடங்கள் நெருக்கமான தொடர்பில் இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அவர் இன்னொரு முறைகேட்டில் அம்பலமாகியுள்ளார்.
சுமார் 1,000 குறிப்புகள்
அமெரிக்காவின் நீதித்துறை வெளியிட்டுள்ள எப்ஸ்டீன் ஆவணங்களில் நோர்வே பட்டத்து இளவரசி Mette-Marit பற்றிய சுமார் 1,000 குறிப்புகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

அந்தக் கோப்புகளில், இருவருக்கும் இடையே பரிமாறப்பட்ட ஏராளமான மின்னஞ்சல்கள் அடங்கியுள்ளன. இது அவர்கள் 2011 முதல் 2014 வரை தொடர்பில் இருந்ததைக் காட்டுகிறது.
Mette-Marit கடந்த 2001 ஆம் ஆண்டில் நோர்வேயின் வருங்கால மன்னரை மணந்தார். ஆனால், எப்ஸ்டீன் ஆவணங்கள் தற்போது நோர்வே அரச குடும்பத்திற்கு ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் வெளியாகியுள்ளதாகவே தெரிய வருகிறது.
பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியுள்ள Mette-Marit-ன் மகன் தொடர்பிலான விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது. Mette-Marit-ன் முதல் கணவருக்கு பிறந்தவர் தற்போது விசாரணையை எதிர்கொள்ளும் Marius Borg Høiby.
ஹோய்பி மீது நான்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், அத்துடன் தாக்குதல் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் உட்பட மொத்தம் 38 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 16 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை ஹோய்பி மறுத்துள்ளார்.

இந்த நிலையில், சனிக்கிழமை தன்னிலை விளக்கமளித்த Mette-Marit, நான் தவறான முடிவெடுத்துவிட்டேன், எப்ஸ்டீனுடன் எந்தவிதத் தொடர்பும் வைத்திருந்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
தானே பொறுப்பு
இருப்பினும், இந்த வார இறுதியில் நோர்வே ஊடகங்களின் கவனம், எப்ஸ்டீனுடன் இளவரசி பரிமாறிக்கொண்ட பல மின்னஞ்சல்கள் மீது இருந்தது. அதில் எப்ஸ்டீனுடன் அவர் மிக நெருக்கமான தொடர்பில் இருந்தது அம்பலமாகியுள்ளது.
மட்டுமின்றி, 2013-ஆம் ஆண்டில் எப்ஸ்டீன் அங்கு இல்லாதபோது, புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள அவரது வீட்டில் Mette-Marit நான்கு நாட்கள் தங்கியிருந்ததும் ஆவணங்களில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், எப்ஸ்டீனின் பின்னணியை இன்னும் உன்னிப்பாகச் சரிபார்க்காததற்கும், அவர் எந்த மாதிரியான நபர் என்பதைப் போதுமான அளவு விரைவாகப் புரிந்துகொள்ளாததற்கும் தானே பொறுப்பு என்று Mette-Marit சனிக்கிழமை கூறியுள்ளார்.
ஆனால், 2011ல் எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், எப்ஸ்டீன் தொடர்பில் தாம் கூகிள் செய்து பார்த்ததாகவும், அதில் அவர் நல்லவரல்ல என தெரிந்து கொண்டதாகவும் ஒரு சிரிக்கும் ஈமோஜியுடன் பதிவு செய்துள்ளார்.
நோர்வே அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014 முதல் எப்ஸ்டீனுடன் இளவரசி எந்த தொடர்பும் முன்னெடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.




