இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக் தொடரில் புளூ ஈகள்ஸ் அணிக்கு எதிராக அப்கன்ட்ரி லயன்ஸ் அணி மற்றொரு இலகு வெற்றியுடன் தோல்வியுறாத அணியாக நீடிப்பதோடு புளூ ஸ்டாரை 3–2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ரினோன் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.
கொழும்பு, சுகததாச அரங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் ஏழாவது வாரத்தை ஆரம்பித்து கடந்த வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற போட்டியில் அப்கன்ட்ரி லயன்ஸ் 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. புளு ஈகள்ஸ் முதல் பாதியில் சிறப்பாக ஆடி கோல்களை விட்டுக்கொடுக்காதபோதும் இரண்டாவது பாதியில் நவீன் ஜூட் மற்றும் மொஹமட் ஆகிபின் இரட்டை கோல்கள் மூலம் அப்கன்ட்ரி அணியால் வெற்றியீட்ட முடிந்தது.
நாவலப்பிட்டி, அப்கன்ட்ரி அணி இதுவரை ஆடிய 7 போட்டிகளிலும் வெற்றியீட்டி 21 புள்ளிகளுடன் அசைக்க முடியாத முன்னிலையை பெற்றுள்ளது.
மறுபுறம் ரினோன் கால்பந்து கழகம் தனது ஏழாவது லீக் போட்டியில் நேற்று முன்தினம் (29) புளூ ஸ்டார் அணியை 3–2 என்ற கோல் கணக்கில் வென்றது. முதல் பாதி ஆட்டம் 2–2 என சமநிலை பெற்றபோதும் இரண்டாவது பாதியில் ரினோன் சார்பில் எமானுவேல் அனாபுல் வெற்றி கோலைப் பெற்றார்.
இந்த வெற்றியுடன் ரினோன் அணி கொழும்பு கால்பந்து கழகத்தை பின்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. கொழும்பு இன்று சீ ஹோக்ஸை எதிர்கொள்ளவுள்ள நிலையில் அதில் வென்றால் முதல் இடத்திற்கு முன்னேற முடியும்.




