விவசாயத் துறையில் வருமானம் இரட்டிப்பு

2 Min Read

இலங்கையின் விவசாயத் துறையானது நிலையான மற்றும் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் வருமானத்தை ஈட்டக்கூடிய முதலீடுகளுக்கான மிகச் சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாக உள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். வர்த்தகம், தளவாடம், கடல்சார் சேவைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலாத்துறை, மேம்பட்ட உற்பத்தி, கனிம வளங்களை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்கள் மற்றும் படைப்புத்துறை உள்ளிட்ட பல துறைகளில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். ”இலங்கையில் விவசாயத்திற்காக சுமார் 33 இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், நாட்டின் பெரும்பாலான பிரதான விவசாயப் பயிர்களின் உற்பத்தித்திறன் அவற்றின் முழுமையான ஆற்றலுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது. சில சந்தர்ப்பங்களில் 50 வீதத்திற்கும் அதிகமான வீழ்ச்சி காணப்படுகிறது.

ஒப்பீட்டளவில் எளிய தொழிநுட்பங்களையும் இலக்கு வைக்கப்பட்ட முதலீடுகளையும் பயன்படுத்துவதன் மூலம் விவசாய உற்பத்தித்திறனை கணிசமாக அதிகரிக்க முடியும். சில துறைகளில் உற்பத்தியை இரட்டிப்பாக அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.

அதேவேளை, சேதன முறையில் நிலையான வகையில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் முழுமையாகக் கண்காணிக்கக்கூடிய விவசாயப் பொருட்களுக்கான உலகளாவிய கேள்வி அதிகரித்து வருவது இலங்கைக்கு மேலும் சாதகமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஒப்பீட்டளவில் குறைந்த முதலீட்டின் மூலம் நாட்டின் கணிசமான விவசாய நிலப்பரப்பை மாற்றியமைக்க முடியும். இதன்மூலம் விவசாய உற்பத்தி மற்றும் அதன் சந்தை பெறுமதியை கணிசமாக அதிகரிக்க முடியும்.

2025ஆம் ஆண்டில் இலங்கையின் விவசாய ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி சர்வதேச சந்தையில் இலங்கை விவசாயப் பொருட்களுக்கான கேள்விக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி சுமார் 43 சதவீதத்தால் அதிகரித்து 1.23 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.

மேலும், பழங்களின் ஏற்றுமதி சுமார் 21 சதவீதம் அதிகரித்து 36 மில்லியன் அமெரிக்க டொலராகவும்,

மரக்கறி ஏற்றுமதி 20 சதவீதம் அதிகரித்து 50 மில்லியன் அமெரிக்க டொலராகவும், ஏனைய ஏற்றுமதிப் பயிர்களின் ஏற்றுமதி 57 சதவீதம் அதிகரித்து 102 மில்லியன் அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.இன்று நாம் எதிர்கொள்ளும் சவால் கேள்வி அல்ல. உண்மையான சவால் உற்பத்தித் திறன் மற்றும் முழுமையான விநியோகச் சங்கிலியில் காணப்படும் திறனின்மைகளாகும். சர்வதேச சந்தையில் வலுவான கேள்வியை எதிர்கொள்ளும் ஏற்றுமதியாளர்கள், இடைத்தரகர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்படாத உற்பத்தியாளர் வலையமைப்புகளில் மாத்திரம் தங்கியிருக்காமல், ‘Backward Integration’ எனப்படும் உற்பத்திச் சங்கிலியின் ஆரம்ப கட்டங்களிலும் அதிக முதலீடு செய்ய வேண்டும்.” எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *