‘ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்களின் பாவனையை குறையுங்கள்’

1 Min Read

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களின் பயன்பாட்டைக் குறைத்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய போத்தல்களை பயன்படுத்துமாறு பொது மக்களிடம் சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இக்கோரிக்கையை சுற்றாடல் அமைச்சு விடுத்துள்ளது. தற்காலிக வசதிக்காக பயன்படுத்தப்படும் ஒரு பிளாஸ்டிக் போத்தல் சுற்றாடலில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருந்து நீண்டகால சுற்றாடல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதனால், பொதுமக்கள் தங்களுடன் மீண்டும் பயன்படுத்தக்கூடிய குடிநீர் போத்தல்களை எடுத்துச் செல்லுமாறும், குறிப்பாக கண்ணாடி போத்தல்கள் உள்ளிட்ட சுற்றாடலுக்கு உகந்த மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் சுற்றாடல் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.அரச நிறுவனங்களில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களை கொள்வனவு செய்வதையும் பயன்படுத்துவதையும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுற்றாடல் அமைச்சின் தலையீட்டுடன் வெளியிடப்பட்ட விசேட சுற்றறிக்கை 2026 மே 31ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதுடன், அதன் ஊடாக அரச நிறுவனங்களில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்களின் கொள்வனவு மற்றும் பயன்பாட்டை குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், 2025ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு அமைவாக அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டைக் குறைக்கும் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.திருத்தப்பட்ட சுற்றாடல் சட்டத்தின் கீழ், தொழிற்துறையினருடன் இணைந்து நாடளாவிய ரீதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் மாத்திரம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. தனிநபர்களின் அன்றாட பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுவது அவசியம்.அதன்படி, வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய குடிநீர் போத்தலை எடுத்துச் செல்வதிலிருந்து பொதுமக்கள் மாற்றத்தை ஆரம்பிக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் தங்கியிருப்பதை குறைப்பதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்காக தூய்மையானதும் பசுமையானதுமான சுற்றாடலை உருவாக்க முடியும்.” எனவும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *