தேசிய மீலாதுன் நபிவிழா 2026; மூன்று நிகழ்ச்சித்திட்டங்கள் நேற்று அங்குரார்ப்பணம்

2 Min Read

தேசிய மீலாதுன் நபி விழாவுக்கு இணையாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் நேற்று திங்கட்கிழமை மூன்று நிகழ்ச்சித்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தேசிய மீலாத் கண்காட்சி, எங்கள் பள்ளிவாசலுக்கு உங்களை வரவேற்கிறோம் நல்லிணக்க நிகழ்ச்சி  என்பவற்றுடன்  20 மில்லியன் ரூபா செலவில் அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய மூன்று மாடிக் கட்டடம் நேற்று திறந்து வைக்கப்பட்டன.

தேசிய மீலாதுன் நபி விழாவுக்கான இணையான இவ்வேலைத்திட்டங்கள், பிரதி சபாநாயகர் ரியாஸ் சாலி, சமய கலாசார பிரதியமைச்சர் முனீர் முளப்பர் ஆகியோரின் தலைமையில் கடந்த 22 ஆம் திகதி முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டன.  அந்த வகையில் மூன்றாவது நாளான நேற்று மேற்படி மூன்று திட்டங்களும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

நேற்றைய தினத்தின் முதலாவது நிகழ்ச்சியாக தேசிய மீலாத் பாடசாலைக் கண்காட்சி நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய மகா வித்தியாலய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியின் ஆரம்ப விழாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசிங்க, பிரதியமைச்சர்களான முனீர் முளப்பர், சுகத் திலகரத்ன, நீர்கொழும்பு மாநகர முதல்வர் துலிப் சாமர, பிரதி மாநகர முதல்வர் முஹம்மட் பசீர் ஆகியோருடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இரண்டாவது நிகழ்ச்சியாக எங்கள் பள்ளிவாசலுக்கு உங்களை வரவேற்கிறோம் நிகழ்ச்சி நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதான ஜும்ஆ பள்ளிவாசலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கே.எஸ்.என். அபேசிங்க, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் சிவில் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

மூன்றாவது நிகழ்வாக அல்-ஹிலால் மத்திய மகா வித்தியாலய வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி வகுப்பறை கட்டடத்தை  மாணவர்களுக்கு கையளிக்கும் வைபவம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி, பிரதியமைச்சர்களான முனீர் முளப்பர், சுகத் திலகரத்ன உட்பட அதிகாரிகள், பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *