இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ 72 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணை

2 Min Read

இலங்கையிலிருந்து தப்பிச் சென்று, துபாயில் தலைமறைவாக இருந்த 36 வயதுடைய, களுத்துறை தெற்கைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர எனும் முக்கிய சந்தேகநபர், மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளினால் இன்று (25) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான தடுப்புக் காவல் உத்தரவை பொலிஸார் பெற்றுள்ளனர்.

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த சந்தேகநபர் மூலம் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய சட்டவிரோத குற்றங்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் பட்டியலை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது:

  • 2013 செப்டெம்பர் 16 (ஹங்வெல்ல): நபர் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகாயப்படுத்தியமை.
  • 2021 (நெலுவத்துடுவ): வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் புகுந்து அங்கிருந்த வாகனத்திற்குத் தீ வைத்துச் சேதப்படுத்தியமை.
  • 2021 (நெலுவத்துடுவ): வர்த்தகரிடம் கப்பம் கோரி மிரட்டி, பணம் தராததால் அவரது வீட்டிற்கு முன்னால் துப்பாக்கிச் சூடு நடத்தி, நபர் ஒருவரைக் கொலை செய்ய முயன்றமை.
  • 2022 ஒக்டோபர் 16 (ஹங்வெல்ல): வீட்டிற்குள் புகுந்து மூன்று பேரை கூரிய ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கிப் படுகாயப்படுத்தியமை.
  • 2022 டிசம்பர் 18 (ஹங்வெல்ல): நபர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை (இதன் வழக்கு அவிசாவளை நீதிமன்றில் நிலுவையில் உள்ளது).
  • 2023 டிசம்பர் 25 (பாதுக்கை): இரு நபர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை.
  • 2024 மார்ச் 04 (ஹங்வெல்ல): நபர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை.
  • 2024 செப்டெம்பர் 30 (நெலுவத்துடுவ): பிரதேச வர்த்தகர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை.
  • 2025 ஜூலை 06 (கொஸ்கம): முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திப் படுகாயப்படுத்தியமை.
  • 2025 ஜூலை 19 (கொள்ளுப்பிட்டி): கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு, குற்றச் செயல்களுக்காக T-56 ரகத் துப்பாக்கி மற்றும் 25 தோட்டாக்களை வழங்கியமை.
  • 2025 ஓகஸ்ட் 12 (மீகொட): மோட்டார் சைக்கிளில் பயணித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை.
  • 2025 ஓகஸ்ட் 13 (மீகொட): முத்துஹேன பகுதியில் துப்பாக்கியால் வான் நோக்கிச் சுட்டு, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி தப்பிச் சென்ற சம்பவத்தை வழிநடத்தியமை.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *