இலங்கை விமானப்படையின் ‘சமையல் கலைத் திருவிழா’

1 Min Read

இலங்கை விமானப்படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘விமானப்படை சமையல் கலைப் போட்டி 2026’, சிகிரியாவில் உள்ள பேராசிரியர் செனரத் பரணவிதான விடுமுறை விடுதிக்கு எதிரே உள்ள வளாகத்தில் (22) வெற்றிகரமாக இடம்பெற்றது.

மூன்றாவது பதிப்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில், சமையல் கலைஞர்களின் சமையல் திறன்களையும் படைப்பாற்றலையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இலங்கை விமானப்படையின் தளபதியான எயார் வைஸ் மார்ஷல் லசித சுமணவீர தலைமையில் பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது.

இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை சமையல் கலைஞர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த இப்போட்டி, உலக சமையல் கலைஞர்கள் சங்கங்களின் சர்வதேச விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு இணங்க நடத்தப்பட்டது.

இந்த போட்டியின் சாம்பியன் பட்டத்தை கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப்படைத் தளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணி வென்றது. இரதமலானை விமானப்படைத் தளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இப்போட்டியில், ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இலங்கை விமானப்படைத் தலைமையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கோப்ரல் தனஞ்சய மிகவும் புகழ்பெற்ற கலவையாளர் விருதையும், அதே அணியின் சிவில் ஊழியர் எம்.பி.எஸ்.பி. குமார மிகவும் சிறந்த சமையல் கலைஞர் விருதையும் வென்றனர்.

முப்படைகள், கலாசார முக்கோணத்தில் உள்ள ஹோட்டல்களின் தொழில்முறை சமையல் கலைஞர்கள் மற்றும் மத்திய, வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் இப்போட்டியில் பங்கேற்றனர்.

அதற்கமைய இவ்வாண்டு இடம்பெற்ற போட்டியில் 325 போட்டியாளர்கள் பங்கேற்றதோடு, 422 போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றது.

சுற்றுலா நகரான சிகிரியாவில் இடம்பெற்ற இப்போட்டியைக் காண ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டதோடு, புதிய சமையல் கலைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கும் நிபுணத்துவம் வாய்ந்த சமையல் கலைஞர்களிடமிருந்து அனுபவத்தையும் வழிகாட்டலையும் பெறும் வாய்ப்பு கிடைத்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *